×

அமைச்சர் வேலுமணிக்கு மு.க.ஸ்டாலினை பற்றி குறை கூற என்ன தகுதி இருக்கிறது : மா.சுப்பிரமணியன் கேள்வி

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் கொள்ளையடித்து தனது கஜானாவை நிரப்பி வரும் அமைச்சர் வேலுமணிக்கு, மு.க.ஸ்டாலினை பற்றி குறை கூற என்ன தகுதி இருக்கிறது என்று மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  உள்ளாட்சி அமைப்புகளில் கொள்ளையடித்து, மக்கள் வரிப்பணத்தில் தனது சொந்த கஜானாவையும், தனக்கு பதவி கொடுத்தவர்களின் கஜானாவையும் நிரப்பி வரும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பற்றி குறை கூறுவதற்கு அருகதையும் இல்லை. அடிப்படை தகுதியும் இல்லை. உள்ளாட்சி நிர்வாகத்தில் ‘ஜீரோ’, நேர்மையில் ‘ஜீரோ’, “வெளிப்படையான டெண்டரை விடுவதில்” ஜீரோ என்று பல ஜீரோக்களை வாங்கி, ஊழலிலும், பணம் சுருட்டுவதிலும் - ‘வேறு விவகாரங்களிலும்’ ஹீரோவாக இருக்கும் வேலுமணிக்கு ஒரு நாகரீகமான அறிக்கையைக் கூட விடத் தெரியவில்லை என்பது தமிழக அமைச்சரவைக்கு வெட்க கேடு.

உள்ளாட்சி துறை அமைப்பில் நடைபெறும் வண்ணமிகு மெகா ஊழல்களில் எனக்கு மட்டும் பொறுப்பல்ல ‘அண்ணன் எடப்பாடியாருக்கும்’ பொறுப்பு என்று அமைச்சர் பகிரங்கமாகக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தான் ஒரு சூரப்புலி போல் அறிக்கை விடுத்துள்ளார். திமுக மற்றும் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார்களில் உள்ள 349 ஒப்பந்தங்கள் தொடர்பான இமாலய ஊழலை விசாரிக்க அனுமதி கொடுத்துள்ளது அதிமுக அரசு தான்.
சென்னை மாநகராட்சியில் 76 கான்டிராக்ட், கோவை மாநகராட்சியில் 244 கான்டிராக்ட், திருப்பூர் மாநகராட்சியில் 4 கான்டிராக்ட், சேலம் மாநகராட்சியில் 2 கான்டிராக்ட், பொதுப்பணித் துறையில் 22 கான்டிராக்ட் ஆகியவற்றை விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியிருப்பது லஞ்ச ஊழல் தடுப்புத் துறைதான்.

ஒரே ஐ.பி. அட்ரஸில் இருந்து இந்த டெண்டர்களை எல்லாம் போட்டிருப்பது எஸ்.பி.வேலுமணியின் பினாமி கம்பெனிகள் தான். புகார்களுக்கு பதில் சொல்லுங்கள் என்று அனுப்பப்பட்ட நீதிமன்ற நோட்டீஸை வாங்காமல் ஓடி ஒளிந்தது அமைச்சர் வேலுமணி தான். ஆற்று மணலுக்குப் பதிலாக எம்.சாண்ட் ஊழலில் இருந்து, அனைத்து மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெற்ற ஊழல்கள் மீது விசாரணை நடைபெற்றாலே அமைச்சர் வேலுமணி சிறைக்குச் செல்வது உறுதி. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அவருக்குத் தெரிகிறது.

அதனால் தான் ஊரக ஊராட்சி தேர்தலை மட்டும் நடத்தி மாநகராட்சி, நகராட்சி ஊழல்களை மறைக்கலாம் என்று சதி திட்டம் போட்டார். இந்த சதி திட்டத்திற்கும், அமைச்சருடன் ஊழல் செய்த அதிகாரிகளுக்கும் திமுக தலைவர் எச்சரிக்கை விடுத்தவுடன், எஞ்சியிருக்கின்ற நாட்களில் ஊழல் செய்ய முடியாதோ என்ற பதற்றத்தில் அறிக்கை என்ற பெயரில் வரிக்கு வரி உளறிக் கொட்டியிருக்கிறார். முதல்வரையும், ஊழல் பணத்தையும் வைத்துக் கொண்டு போலீஸ் அதிகாரிகளை, மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டிக் கொண்டிருக்கும் வேலுமணி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். “கையூட்டு”க் கொடுத்து இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை இனி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து உள்ளாட்சி தேர்தலில் பெற்று விடலாம் என்று அமைச்சர் கனவு காண வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Velumani ,MK Stalin: Subramanian , Minister Velumani , right to complain, MK Stalin,Subramanian
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...