எழும்பூர்-கோடம்பாக்கம் இடையே 164 ஆண்டு பழமையான நீராவி இன்ஜின் ரயில் இயக்கம் : வெளிநாட்டு பயணிகள் ஆர்வமுடன் பயணம்

சென்னை: எழும்பூர்- கோடம்பாக்கம் இடையே நேற்று 164 வருட பழமையான நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்பட்டது. இதில் வெளிநாட்டை சேர்ந்த பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்தனர். இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட பெய்ரி குயின் ஈஐஆர் 21 ரக நீராவி இன்ஜின் ரயில் 1855ம் ஆண்டு கப்பல் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நீராவி இன்ஜின் ரயில் 1855ம் ஆண்டு தனது சேவையை தொடங்கியது. அதன்பிறகு 1909ம் ஆண்டு சேவையை நிறுத்திக்கொண்டது. அதன் பிறகு அது கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு வந்தது.பின்னர் இந்த ரயிலை தெற்கு ரயில்வே, சுற்றுலாவை மேம்படுத்தவும், பொதுமக்கள் பார்வைக்காகவும் இயக்கத் திட்டமிட்டது. அதன்படி கடந்த 2010ம் ஆண்டு முதல் நீராவி இன்ஜின் ரயிலை மீண்டும் இயக்குவதற்காக புதுப்பித்து தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் பார்வைக்காக இயக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று எழும்பூர்-கோடம்பாக்கம் இடையே நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இன்ஜினில் இணைக்கப்பட்ட பெட்டியில் 40 இருக்கைகள் உள்ளன. அதில் பயணிகள் பயணிக்கலாம். அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

அதன்படி நேற்று நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்பட்டது. அதில் பயணம் செய்ய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்த ரயிலை மத்திய ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் உடன் இருந்தனர். பின்னர் நீராவி இன்ஜின் ரயிலில் பயணம் செய்தது குறித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூறியதாவது: நாங்கள் இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்த போது, பாரம்பரியமிக்க பழமையான இந்த நீராவி இன்ஜின் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்படி நாங்கள் தெற்கு ரயில்வேயை தொடர்பு கொண்டு மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்தோம். அதன்படி நேற்று 164 ஆண்டுகள் பழமையான இந்த நீராவி இன்ஜின் ரயிலில் பயணம் செய்தோம். பழமையான இந்த நீராவி இன்ஜினில் பயணம் செய்தது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்றனர். மேலும், இந்த ரயில், பயணிகளுக்கு புது அனுபவத்தை அளிப்பதற்காக பழமையான நீராவி இன்ஜின் ரயில்கள் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினார். ஆனால் நேற்று இயக்கப்பட்ட நீராவி இன்ஜினில் அனைத்து பயணிகளும் வெளிநாட்டை சேர்ந்தவர்களே ஆவர். மேலும், நீராவி இன்ஜின் இயக்கப்படுவதை கேள்விப்பட்டு பார்வையிட வந்த பொதுமக்களை ரயிலில் ஏறி சுற்றிப்பார்க்க அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories: