35 ஆயிரம் பெண்கள் பணியாற்றும் சிறுசேரி ஐடி பார்க்கில் 24 மணி நேரம் ரோந்து : 57 சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டம்

சென்னை: பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சிறுசேரி ஐடி பார்க் வளாகத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தும் வகையில் 24 மணி நேரம் ரோந்து பணி மற்றும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படவுள்ளது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சிறுசேரியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா (ஐடி பார்க்) உள்ளது. சுமார் 800 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த ஐடி பார்க்கில் மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட 49 நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 90 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  இவர்களில் சுமார் 35 ஆயிரம் பெண்கள். சென்னை மத்திய கைலாசிலிருந்து 26 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த வளாகத்தில் பணியாற்றுபவர்களிடம் சமூக விரோதிகள் செல்போன் மற்றும் நகை பறிப்புகளில் ஈடுபடுகிறார்கள். கடந்த 2014ல் இந்த வளாகத்தில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் ஒருவர் மாலையில் வீடு திரும்பும்போது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் 9 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இந்நிலையில், இந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 24 மணி நேர ரோந்து திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. ஒரு ரோந்து வாகனத்தில் 6 செக்யூரிட்டி ஆட்கள் பணியில் இருப்பார்கள். இந்த ஐடி பார்க்கை பராமரித்துவரும் சிப்காட் நிர்வாகம் அந்த வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வேகமாக இயங்கும் ரோந்து வாகனங்களின் தொடர்பு எண்ணை தர திட்டமிட்டுள்ளது.

ஆபத்தான நேரங்களில் ஊழியர்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டால் உடனடியாக அந்த இடத்திற்கு ரோந்து வாகனம் வந்துவிடும். அதுமட்டுமல்லாமல் சிறுசேரி போலீசாரின் ரோந்து வாகனங்களும் இந்த ஐடி பார்க்கில் ரோந்து பணிகளில் ஈடுபடும்.

வளாகத்தில் தற்போது 17 சிசிடிவி கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, மேலும் 57 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. தற்போது இந்த கேமராக்கள்  கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படவுள்ளன. அதுமட்டுமல்லாமல் அதிக ஒளிவெள்ளத்தை பாய்ச்சும் 5 மின்விளக்குகளும் இந்த வளாகத்தில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிப்காட் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய பாதுகாப்பு திட்டம் 2020 ஜனவரி முதல் செயல்பட தொடங்கும் என்று சிப்காட் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: