உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக்கோரி மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

சென்னை: உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக்கோரி மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று மனு அளித்தார். மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த பிறகு ஆர்.எஸ்.பாரதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

உச்ச நீதிமன்றத்தில் தேர்தலை நேர்மையாகவும், முறையாகவும் நடத்தக்கோரி திமுக வழக்கு தொடர்ந்தது. இதில், குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் வரையறையை சரியாக செய்யவில்லை எனக்கூறி அங்கு தேர்தலை நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மிஞ்சியுள்ள 27 மாவட்டங்களிலும் திமுக வைத்த கோரிக்கையை ஏற்று என்ன வகைகளில் தேர்தலை நடத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.  அதுதான் தீர்ப்பு. முதல்வரில் இருந்து சட்ட அமைச்சரில் இருந்து பலபேரும் திமுக இந்த வழக்கில் தோற்றுவிட்டதை போன்ற ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுக தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. தேர்தல் ஆணையத்திற்கும், அரசுக்கும் நீதிமன்றம் அறிவுரைதான் வழங்கியுள்ளது. அமைச்சர்கள் தவறான பேட்டி கொடுத்து வருகின்றனர். அதனால்தான் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் சில சிக்கலான விவரங்கள் உள்ளது என்று விளக்கம் கேட்டபோது, எங்களுடைய தீர்ப்பு தெளிவாக உள்ளது. அதை புரிந்துகொண்டு அவர்கள் செயல்படாவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

எனவே, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரையை தேர்தல் ஆணையத்தில் மனுவாக அளித்துள்ளோம். இதனை தேர்தல் ஆணையம் பின்பற்றாவிட்டால் அவமதிப்பு வழக்கை திமுக தொடருவோம் என முன்கூட்டியே கூறிவிட்டு வந்துள்ளோம். இந்த வழக்கில் பல சிக்கல் உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க திமுக தயாராகிவிட்டது. இன்றோ அல்லது நாளையோ அதிகாரப்பூர்வ திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த தேர்தலில் 2011 தேர்தலில் செய்த குளறுபடிகள் போல் யாராவது செய்வார்கள் என்றால் அவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று ஏற்கனவே நாங்கள் கொடுத்த மனுவிலேயே தெரிவித்துள்ளோம். இதை பார்த்த பிறகாவது தேர்தல் அதிகாரிகளும், மற்றவர்களும் நியாயமாக தேர்தலை நடத்திட வேண்டும். நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தும் பட்சத்தில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். இவ்வாறு கூறினார்.

Related Stories: