×

போலி அடையாள அட்டையுடன் கமிஷனர் அலுவலகத்தில் உலா வந்தவர் அதிரடி கைது

சென்னை: சாலை பாதுகாப்பு அதிகாரி என போலி அடையாள அட்டை வைத்துக்கொண்டு, வேப்பேரி கமிஷனர் அலுவலகத்தில் சுற்றி சுற்றி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை, நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சாம்ஜெபராஜ் (61). இவர், நேற்று வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து அங்கும், இங்கும் சுற்றி திரிந்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அப்போது, அவர் சாலை பாதுகாப்பு அதிகாரி என்ற பெயரில் தன்னிடம் உள்ள அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அந்த அடையாள அட்டையை வாங்கி பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் துறையில் சாலை பாதுகாப்பு அதிகாரி என எதுவும் இல்லையே எனக்கூறி உடனே வேப்பேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்படி கமிஷனர் அலுவலகத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது போலியான அடையாள அட்டை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்று விசாரிக்கின்றனர்.

Tags : Action against ,fake ID card
× RELATED அஞ்சலக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்