தமிழகத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களை போல் வலுவான போராட்டம் நடைபெற வேண்டும் : திருமாவளவன் பேட்டி

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, வடகிழக்கு மாநிலங்களைப்போல் வலுவான போராட்டம் தமிழகத்தில் நடைபெற வேண்டும்  என்று திருமாவளவன் கூறினார். வடசென்னை மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது. கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷமிட்டனர்.பின்னர், திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாசிஷ அரசியலை பாஜ மேற்கொண்டு வருகிறது, வெறுப்பு அரசியல் நடத்தி வருகிறது. அதிகாரத்தை பயன்படுத்தி நீண்டகால கனவு திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. நீண்டநாள் பிரச்னையாக அயோத்தி ராமர் கோயில் இருந்தது. தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களை புறக்கணிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதை மாநிலங்களவை, மக்களைவையில் நிறைவேற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது என்பது மதத்தையும் நாட்டையும் கூறுபோடும் செயலாகும்.

இது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், தேச நலனுக்கு எதிராகவும் நடக்கும் நடவடிக்கையாகும். ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி தேசத்தை காக்கவேண்டும். எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போராட்டம் நடத்தாமல் ஒன்றிணையவேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடத்துவது போன்று வலுவான போராட்டம் தமிழகத்தில் நடைபெறவேண்டும். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். மாநிலங்களவையில் அதிமுக எதிர்த்து வாக்களித்து இருந்தால் குடியுரிமை மசோதா நிறைவேறாமல் இருந்திருக்கும். மிக சொற்ப எண்ணிக்கையில் மசோதா தோல்வி அடைந்திருக்கும். அதிமுகவின் செயல் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமாகும். இதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இவ்வாறு கூறினார். ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச்சிறுத்தை நிர்வாகிகள் வன்னியரசு, செல்வம், அன்புசெழியன், கன்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: