டெல்லியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் ஆவேச பேச்சு பொருளாதார வீழ்ச்சிக்கு தனி ஒருவரே காரணம் : பிரதமர் மோடி மீது நேரடி தாக்குதல்

புதுடெல்லி: ‘‘நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் தனியொரு ஆளாக பிரதமர் மோடியே அழித்து விட்டார்,’’ என்று டெல்லியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக குற்றம்சாட்டினார். நாட்டின் பொருளாதார சீரழிவு, குடியுரிமை சட்டத் திருத்தம், விவசாயிகள் தவிப்பு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. ‘இந்தியாவை காப்போம்’ என பெயரிடப்பட்ட இந்த பொதுக்கூட்டத்தில், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர் ப.சிதம்பரம், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: வலுவான நம் நாட்டின் பொருளாதாரத்தை எப்படியாவது சீரழித்து விட வேண்டுமென எதிரிகள் எண்ணினார்கள். எதிரிகளால் அதை செய்ய முடியவில்லை. ஆனால், பிரதமர் மோடி செய்து விட்டார். தனி ஆளாக இருந்து, ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதாரத்தை அவர் சீரழித்து விட்டார். அப்படியிருந்தும் தன்னை தேச பக்தன் என கூறிக் கொள்கிறார்.

அதிகாரத்திற்காக எதையும் அவர்கள் செய்வார்கள். இளைஞர்களை வேலை இல்லாதவர்களாக ஆக்குவார்கள், பொருளாதாரத்தை சீரழிப்பார்கள், இன்னும் எதையும் செய்வார்கள். மீடியா உள்ளிட்ட நிறுவனங்கள், நீதித்துறை போன்ற அரசியல் சாசன அமைப்புகள் தங்கள் பணியை மறந்து விட்டன. ஐமு கூட்டணி அரசை மீடியாக்கள் விமர்சித்தன. அதை நான் மதிக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்தீர்கள். ஆனால், இப்போது அதை மறந்து விட்டீர்கள். இந்த நாடே ஒரு வித பயத்திலும், நெருக்கடியிலும் தான் இருக்கிறது. ஆனால், காங்கிரசாருக்கு எந்த பயமும் இல்லை. இங்கு யாரும் பயப்பட வேண்டாம். உங்களுடன் எப்போதும் காங்கிரஸ் துணை நிற்கும். நாட்டிலிருந்து பயத்தை விரட்டும் வரை காங்கிரஸ் இணைந்து செயல்படும். பாஜ.வும், பிரதமர் மோடியும் வடகிழக்கு மாநிலத்தில் தீயை பற்ற வைத்துள்ளனர். எல்லா இடமும் பற்றி எரிகிறது. மக்களை பிரித்து நாட்டை பலவீனமாக்குகின்றனர். இதனால், பொருளாதாரம் மந்தமாகிறது. இதை மக்கள் புரிந்து கொண்டு, பிரிக்கும் சக்திகளை விரட்ட வேண்டும். பணமதிப்பிழப்பின் மூலம் கறுப்பு பணம் அகற்றப்படும் என மோடி உங்களை முட்டாளாக்கி விட்டார்.  

கறுப்பு பணத்திற்கு எதிராக போராடுகிறேன் என்று கூறி ஏழைகளின் பையிலிருந்து பணத்தை பிடுங்கி, அம்பானி-அதானிக்கு தாரை வார்க்கிறார். யாருக்கும் காங்கிரசார் பயப்பட மாட்டார்கள். நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பவர்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.சாவர்க்கரை கூறியது ஏன்? இந்துமகா சபையை நிறுவிய வீர சாவர்க்கர், ஆர்எஸ்எஸ், பாஜ போற்றும் முக்கிய தலைவராவார். சிறு வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அவருக்கு ஆங்கிலேய அரசு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அ்ங்கு பல கொடுமைகளை சந்தித்தார். பின்னர், பலமுறை மன்னிப்பு கடிதம் அளித்து கோரிக்கை விடுத்ததால் 1921ல் அவர் அந்தமானில் இருந்து இந்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிவசேனா எதிர்ப்பு: ராகுல் பேச்சு குறித்து சிவசேனா  கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ‘‘வீர சாவர்க்கர் மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்தின் தலைவர். சாவர்க்கரின் பெயர் நாட்டிற்கும், நமக்கும் பெருமை சேர்க்கக் கூடியது. நேரு, காந்தி போல சாவர்க்கரும் நாட்டிற்காக வாழ்வை தியாகம் செய்துள்ளார். எல்லா தேச தலைவர்களும் மதிப்பிற்குரியவர்களே. இதில் எந்த சமரசமும் இல்லை,’’ என்றார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் ஆதரவில்தான் சிவசேனா ஆட்சி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘செத்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன்’

ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் சமீபத்தில் பேசிய ராகுல், நாட்டில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டி, ‘மேக் இன் இந்தியா, ‘ரேப் இன் இந்தியா’வாக மாறிக் கொண்டிருக்கிறது என்றார். இதற்கு நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பாஜ எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென அமளி செய்தனர்.  இது குறித்து டெல்லி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ‘‘பாலியல் பலாத்காரம் குறித்து பேசியதற்காக, நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜ கூறுகிறது. என் பெயர் ஒன்றும் ராகுல் சாவர்க்கர் அல்ல; என் பெயர் ராகுல் காந்தி. உண்மையை பேசுவதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். உண்மையை பேச உயிரையும் கூட விடுவேனே தவிர, மன்னிப்பு கேட்க மாட்டேன். அதை எந்த ஒரு காங்கிரஸ்காரனும் செய்ய மாட்டான். இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்ததற்காக பிரதமர் மோடியும், அவரது உதவியாளர் அமித் ஷாவும் தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என்றார்.

ஜனநாயகத்தை காக்கும் நேரம் இது

பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, ‘‘இந்தியாவின் ஆன்மாவை தகர்த்தெறியும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடே போராட வேண்டும். அநீதி இழைப்பது மிகப்பெரிய குற்றம். நம் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. இதற்காக நாம் கடுமையாக போராட வேண்டும். மோடி-ஷா அரசு நாடாளுமன்றத்திற்கோ அல்லது வேறெந்த அரசியலமைப்பிற்கோ கவலைப்படுவதில்லை. அவர்களின் ஒரே நோக்கம், உண்மையை மறைத்து மக்களுக்குள் சண்டை மூட்டிவிடுவதுதான். அரசியல் சாசனத்தை தினம் தினம் மீறும் அவர்கள் அரசியல் சாசன தினத்தையும் கொண்டாடிக் கொள்கிறார்கள்,’’ என்றார்.

6 ஆண்டாக தவறாக வழிநடத்தி விட்டார்

மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘6 ஆண்டுகளுக்கு முன், மோடி பல கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்தார். இன்று அவை அனைத்தும் பொய்யானவை என்பது நிரூபணமாகி விட்டது. வாக்குறுதியை நிறைவேற்ற தவறி, நாட்டு மக்களை தவறாக வழி நடத்திவிட்டார்,’’ என்றார். ப.சிதம்பரம் பேசுகையில், ‘‘கடந்த 6 மாதத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது மோடி அரசு. அமைச்சர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். நிதி அமைச்சரோ எல்லாம் சரியாக இருக்கிறது, நாம் உலகின் முதன்மையான இடத்தில் இருக்கிறோம் என்கிறார். நல்ல நாள் வரப்போகிறது என்று மட்டும் அவர் கூறவில்லை,’’ என கிண்டலடித்தார்.

இனியும் அமைதியாக இருக்கக் கூடாது

பிரியங்கா காந்தி பேசுகையில், ‘‘அநீதிக்கு எதிராக போராடாதவர்களே கோழைகளாக கருதப்படுகின்றனர். இனியும் நாம் அமைதி காத்தால், நாட்டை பிரித்து, அரசியல் சாசனத்தை அழிக்கும் செயல்கள் தொடங்கிவிடும்,’’ என்றார்.

Related Stories: