புதுச்சேரி கடலில் குளித்தபோது காஞ்சி மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கினர்: 4 பேர் மீட்பு; ஒருவர் மாயம்

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் குளித்த வேலூர் கல்லூரி மாணவர்கள், ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.  வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் பகுதியை கல்லூரி மாணவர்கள் 14 பேர் விடுமுறைக்காக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அனைவரும் காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் படிப்பவர்கள். ரயில் மூலம் புதுச்சேரிக்கு வந்த அவர்கள், முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். நேற்று மதியம் 12.30 மணியளவில் புதுச்சேரி கடற்கரை சாலை தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் பரப்பு பகுதிக்கு சென்றனர். அங்கு சூர்யா, கோவர்த்தன், ஆனந்த், ரமேஷ் மகன் விஜய், நாகராஜ் மகன் விஜய் ஆகிய 5 பேர் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய அவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். நீச்சல் தெரியாததால் 5 பேரும் கடலில் மூழ்கினர். இதனை கரையில் இருந்து பார்த்த மற்ற மாணவர்களும், சுற்றுலா பயணிகளும் கூச்சலிட்டனர்.

 இதுபற்றி, புதுச்சேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்து கடலில் இறங்கி மாணவர்களை தேடினர். சூர்யா, ரமேஷ் மகன் விஜய், நாகராஜ் மகன் விஜய், ஆனந்த் ஆகிய 4 மாணவர்களும் மீட்கப்பட்டனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கோவர்த்தன் மட்டும் கிடைக்கவில்லை. அவரை தேடி வருகின்றனர். கோவர்த்தன், காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படிப்பவர். ஐடி ஊழியர் சாவு: கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் திபூரா (26).

ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர் தனது சக ஊழியர்களான சகானா (24), தனுஷி (24), பவித்ரா (24) உட்பட 8 பேருடன் புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் வந்தார். நேற்று மதியம் புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான தந்திராயன் கடற்கரைக்கு வந்தனர். அங்கு திபூரா, சகானா, தனுஷி, பவித்ரா ஆகிய 4 பேர் கடலில் குளித்தனர். மற்றவர்கள் கரையில் அமர்ந்து அலையை ரசித்தனர். அப்போது, திபூரா ராட்சத அலையில் சிக்கிக் கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி புதுவை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திபூரா உயிரிழந்தார்.

Related Stories: