ஊராட்சி தலைவர் தேர்தல் உலக பேமஸாயிருச்சு... ‘ப்ளீஸ்...வோட் பார் மாமா’பிரான்ஸ் மாணவி பிரசாரம்: திருப்புவனத்தில் ருசிகரம்

திருப்புவனம்: திருப்புவனத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவருக்கு ஆதரவாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாணவி ஓட்டு வேட்டையாடியதை பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்தனர். தமிழகமெங்கும் ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மேலராங்கியம் ஊராட்சி தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்ய வந்த மருதுபாண்டியுடன், பிரான்ஸ் நாட்டு மாணவி சூயீ பெல்லோர்(19) என்பவரும் வந்திருந்தார். அவர் செல்லும் வழியில் எல்லாம் பார்ப்பவர்களை, ‘‘ஹாய்... ப்ளீஸ் வோட் பார் மாமா’’ என சிரித்தபடியே, ஓட்டு வேட்டையாடினார். அது மட்டுமின்றி சரக்கு வாகனத்திலும் பெண்களுடன் ஜாலியாக சவாரி சென்றார். அங்கு அவருக்கு பலர் குங்குமமிட்டும் வரவேற்றனர்.

இதுகுறித்து பிரான்ஸ் மாணவி சூயீ பெல்லோர் கூறுகையில், பிரான்ஸ் நாட்டின் பிளெவ்கேஸ்டல் டவ்லஸ் என்ற நகரில் வசித்து வருகிறேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டே தனியாக வேலை பார்த்தேன். அந்தப்பணத்தை சேமித்து வைத்திருந்தேன். அதில்தான் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தேன். ஊட்டியில் ஒருவாரம் தங்கியிருந்தபோது அங்கே கடை நடத்திவரும் மேலராங்கியத்தை சேர்ந்த முனீஸ்செல்வத்தின் நட்பு கிடைத்தது. அவர் சொந்த ஊருக்கு (மேலராங்கியம்) போவதாகவும், அவரின் மாமா மருதுபாண்டி, ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிந்தேன். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தேர்தலை காண ஆர்வம் ஏற்பட்டது. நானும் அவருடன் வந்தேன். வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தது, பட்டாசு வெடிப்பது, மாலை அணிவிப்பது, குங்குமம் வைப்பது என இங்கு எல்லாமே வித்தியாசமாக இருக்கு. ப்ளீஸ் வோட் பார் மாமா...’’ என்று உற்சாகமாக சிரித்தபடியே தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.

Related Stories: