சேலத்தில் வீட்டு வேலைக்காக வந்து மீட்கப்பட்ட 29 குழந்தைகள் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு: சட்டீஸ்கருக்கு ரயிலில் அழைத்து சென்றனர்

சேலம்: சேலத்திற்கு வழிதவறி மற்றும் வீட்டு வேலைக்காக ரயிலில் வந்து மீட்கப்பட்ட 29 குழந்தைகளை சட்டீஸ்கர் மாநில அதிகாரிகளிடம் தனியார் தொண்டு நிறுவனத்தினர் ஒப்படைத்தனர்.  சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு கடந்த சில மாதங்களாக சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து 10 சிறுவர்கள், 19 சிறுமிகள் வந்தனர். அவர்களை ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு, சேலம் ஐயந்திருமாளிகை பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்து பராமரித்து வந்தனர். இந்த 29 குழந்தைகளிடமும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் ராஜசுனிதா, கல்பனா ஆகியோர் விசாரித்து, அவர்களின் பெற்றோர் இருப்பிடத்தை அறிந்தனர்.

பின்னர், சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுமம் மூலம் அக்குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர். இதன்படி சட்டீஸ்கர் மாநிலம் கொண்டையா மாவட்ட சைல்டுலைன் அமைப்பு நிர்வாகி லட்சுமிகஷ்யாப், அம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழும ஆலோசகர் மகேஷ் உள்ளிட்ட 9 பேர் நேற்று சேலம் வந்தனர். அவர்களிடம் 29 குழந்தைகளும் ஒப்படைக்கப்பட்டனர். அந்த குழந்தைகளை ரயிலில் சட்டீஸ்கருக்கு அம்மாநில அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதுபற்றி தொண்டு நிறுவன நிர்வாகி ராஜசுனிதா கூறுகையில், “இதுவரை 2,564 குழந்தைகளை நாங்கள் மீட்டு பெற்றோரிடம் உரிய விசாரணைக்கு பின் ஒப்படைத்துள்ளோம்,’’ என்றார்.

Related Stories: