காட்டாற்று வெள்ளம் பாய்ந்ததால் மூல வைகையாற்றில் தடுப்பணை உடைந்து வீணான தண்ணீர்: புதிதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை

வருஷநாடு:   வருஷநாடு மூல வைகையாற்றில்

தடுப்பணை உடைந்து தண்ணீர் வீணானது. அங்கு புதிய தடுப்பணை கட்டி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தேனி மாவட்டம், வருஷநாடு, மூல வைகையாற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை மற்றும் தடுப்புசுவர் கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் பலத்த சேதமடைந்தது. இதனால் ஊருக்குள் நீர் புகும் அபாயம் உள்ளது.  இப்பகுதியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மூல வைகையாற்றை நம்பியே விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வருசநாடு அருகேயுள்ள மொட்டப்பாறை மலைப்பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்பணை காட்டாற்று வெள்ளத்தால் பலத்த சேதமடைந்தபோதும், இங்கு பாதிப்படைந்த பகுதிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மட்டுமே செய்துள்ளனர்.  இதுவரை எந்த ஒரு பணியும் நடக்கவில்லை.   இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘₹3 கோடிக்கு மேல் மதிப்பீடு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம், விரைவில் நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கும்’’ என்றனர்.

 வருஷநாடு பகுதியை சேர்ந்த பந்தல்ராஜா கூறும்போது, ‘‘கடந்த சில மாதங்களாகவே பழைய தடுப்புசுவர், தடுப்பணை பகுதி மிகவும் பாதிப்படைந்த நிலையில் இருந்தது.  மழை காரணமாக தற்போது மேலும் சேதம் ஏற்பட்டு தடுப்புச்சுவரை நீர் அடித்து சென்று கொண்டிருக்கிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருஷநாடு மூல வைகையை பாதுகாக்க வேண்டும். மேலும் இங்கு மண் அரிப்பை தடுக்க வேண்டும்’’ என்றார். இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘தடுப்பணையின்றி, இப்பகுதியில் உள்ள மணல், வண்டல் மண் வீணாக அடித்து செல்லப்படுகிறது. இப்பகுதி  நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. மாவட்ட அதிகாரிகளிடம் தடுப்புசுவர், தடுப்பணை கட்ட கோரி பல்வேறு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டத்திற்கு தயாராகி வருகிறோம்’’ என்றனர்.

Related Stories: