இந்த வார பிரச்னைகள் மக்களின் பார்வையில்

வாகன ஓட்டிகள் மோதல்:

காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சந்திப்புப் பகுதியான மூங்கில் மண்டபம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வள்ளல் பச்சையப்பன் தெரு ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு 8 அடி உயரத்தில் பேரிகார்டுகள் வைக்கப்படுகின்றன. பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் காந்தி சாலைக்கு செல்ல சமார் 5 நிமிடத்திற்கும் மேலாக மூங்கில் மண்டபம் சந்திப்பு பகுதியில் நிற்க வேண்டியுள்ளது. அப்போது காமராஜர் சாலை மற்றும் வள்ளல் பச்சையப்பன் சாலை பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகளால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. -முகமது மன்சூர் ஆலம், தையல் தொழிலாளி, காஞ்சிபுரம்.

நோய் பரப்பும் மையம்:

அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் உள்ளே, நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏராளமான சீமை கருவேல மரங்கள்  வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மழைநீர் செல்வது தடைபடுவதுடன், பெருவெள்ளம் போன்ற சமயங்களில், வெள்ள நீர் ஊரின் உள்ளே புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  புதர் போல அதிகரித்து காணப்படும் சீமைக் கருவேல மரங்களை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நின்று, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் இடமாகவும் மாறி வருகிறது. -கார்த்தி, வியாபாரி, துரைப்பாக்கம்.

அரசு பஸ்சை காணவில்லை

மாமல்லபுரம் அடுத்த மணமை, மலைமேடு, குன்னத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கண்ட கிராமங்கள் வழியாக டி.28 அரசு பேருந்து  இயக்கப்பட்டு வந்தது. அந்த பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் மேற்கண்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நகர் புறங்களுக்கு வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.

-ச.வேங்கமலை, சமூக ஆர்வலர்,

லிங்கமேடு மணமை.

பாதை ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி:

திருநின்றவூர் நிலையத்திற்கு சி.டி.எச் சாலையில் இருந்து செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும், இச்சாலையில் வாகனங்களும் செல்ல முடியவில்லை. மேற்கண்ட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை புகார் அளித்துள்ளனர். இருந்த போதிலும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. - எஸ்.முருகையன், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர், திருநின்றவூர்.

ஷேர் ஆட்டோக்களை கவனிப்பீங்களா ஆபீசர்?

சென்னை கொடுங்கையூர் எம்.ஆர். நகர் சந்திப்பிலிருந்து டவுட்டன் பாரிஸ் சென்ட்ரல் என மூன்று பகுதிகளுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஷேர் ஆட்டோக்கள் பெரும்பாலும் முறையாக பதிவுகளுடன் இல்லாமல் பல ஆட்டோக்கள் பர்மிட் இல்லாமல் ஓடுகின்றன.மேலும் அதிகப்படியான ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். எனவே வட்டார போக்குவரத்து  அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். -பென்ஜமின், சமூக ஆர்வலர், கொடுங்கையூர்.

பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

கத்திவாக்கம் மேம்பாலம் கீழே சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் மாநகரப் பேருந்து மேம்பாலத்தின் மீது ஏறி சென்று விடுகிறது. இதனால் அலுவலர்களும், பெண்களும் பேருந்துக்காக மேம்பாலத்தை கடந்து போய் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே பழுதடைந்த சாலையை சீரமைத்து இந்த வழியாக பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்.- வ.ரவனநம்மாள், தனியார் நிறுவன ஊழியர்,  எண்ணூர்.    

பிரதான சாலையில் பெரிய பள்ளம்

ஆதம்பாக்கம் ஏரிக்கரை தெரு பிரதான சாலையில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டதால் பெரிய பள்ளம் தோண்டி கடந்த 20 நாட்களுக்கு மேலாக பணியினை செய்து வருகின்றனர். இதனால்  சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் வியாபாரிகளும் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். இந்த பணியினை மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் உடனடியாக முடிக்க நடவடிக்கை வேண்டும்.  

-மணிகண்டன், வியாபாரி,ஆதம்பாக்கம்.      

மரத்தை அகற்றியதை கண்டுகொள்ள மாட்டீர்களா?

சென்னை மாநகராட்சி 5-வது மண்டலம் அலுவலகம் எதிரே பேசின் பிரிட்ஜ் சாலையில் சாலையோரம் இருந்த பழமை வாய்ந்த மரத்தை மாநகராட்சி ஒப்பந்ததாரர் அகற்றி உள்ளனர். மரத்தை வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மரத்தை அகற்றுகிறார்கள். இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டிக்க வேண்டும். -முருகன், சமூக ஆர்வலர், மூலகொத்தலம்.

சித்தேரியையும் விட்டு வைக்கவில்லை:

திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மயிலை கிராமத்தில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியை நம்பி சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக மழை பெய்தாலும் ஏரிக்கு வந்து சேர வேண்டிய நீர் வர முடியாத நிலை உள்ளது. ஏரியை பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறை இந்த ஏரியை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஒரு போக விவசாயம் கூட செய்ய முடியாத நிலை உள்ளது. -தனசேகர வர்மன், கட்டிட ஒப்பந்ததாரர், மயிலை.

பாலாற்றுப்பாலத்தில் மண் குவியல்:

காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் பாலாற்றுப் பாலம் உள்ளது. இதன் இருபுறமும் மண்குவியல்கள் சேர்ந்து உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எதிரெதிராக இரண்டு வாகனங்கள் வரும்போது, பைக்கில் செல்வோர் மண்குவியல் மீது ஏறி வழுக்கி விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் தற்போது பெய்த மழையால் பாலத்தில் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. -பாலாஜி, பட்டதாரி, செவிலிமேடு.

நிரந்தர டாக்டர், நர்ஸ்கள் வேண்டும்:

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட நத்தம் பகுதியில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் டாக்டர்கள்,செவிலியர்கள் நிரந்தரமாக இல்லை. வாரத்தில் புதன்கிழமை மட்டுமே ஒரு செவிலியர் வந்து மாத்திரை மருந்துகள் வழங்குகிறார். இங்குள்ள பகுதி மக்கள் ஏதாவது திடீர் பிரச்சினை என்றால் 3 கிலோமீட்டர் தூரமுள்ள செங்கல்பட்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக டாக்டர்கள் செவிலியர்கள் நியமிக்க வேண்டும். - காஞ்சனா, மகளிர் சுய உதவி குழு தலைவர், நத்தம்.

குண்டும், குழியுமான சாலைகளால் விபத்து:

செங்குன்றம் பாப்பார மேடு, வடகரை கிரான்ட் லைன், விநாயகபுரம், சின்ன தோப்பு,  வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், பைபாஸ் சாலை வரை செல்லும் மாதாவரம் நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் மின் விளக்கும் முறையாக செயல்படுதில்லை. -காமேஷ் ராஜாமணி, தனியார் நிறுவன ஊழியர், புழல்.

முறையான இறைச்சி கூடம் வேண்டும்

மீஞ்சூர் பேரூராட்சியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட ஆடு மாடு இறைச்சி கடை கள் உள்ளன. குறிப்பாக அரியன் வாயல் பகுதியில் இறைச்சி கடைகள் அதிகம் .ஆனால் இங்கு முறையான ஆடு மாடு அறுக்கும் தொட்டி இது வரை அமைக்கப்படவில்லை.

இதனால் கடைகளுக்குள்ளேயே கால்நடைகள் அறுத்து அதன் இரத்தங்கள் சாணம் ஆகியவற்றை கழிவு நீர் கால்வாய்களிலும் இறைச்சி கழிவுகளை சாலை ஒரங்கிளிலும் கொட்டும் நிலை உள்ளது. -நாகூர் கனி, தனியார் நிறுவன ஊழியர், மீஞ்சூர் அரியன்வாயல்.

பஸ்சை  நிறுத்திட்டாங்க...

கல்பாக்கம் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக  கோயம்பேட்டிற்கு தடம் எண் 108 என்ற அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணியை காரணம் காட்டி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இப் பேருந்து சேவையை நிறுத்தினர். அதன் பிறகு இன்று வரை கோயம்பேட்டிற்கு இப் பேருந்தை இயக்காததால் கிராமப் பகுதிகளிலிருந்து சென்னை செல்ல  பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

-ஏ.டில்லி, சமூக ஆர்வலர், நல்லூர்.

Related Stories: