உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.  கடந்த கால தேர்தல்களில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. ஆனால் தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் 2010ம் ஆண்டு மதிமுக மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது. இதற்கு, மதிமுகவின் வாக்கு வங்கி கடந்த கால தேர்தல்களில் ஒரு சதவீதத்திற்கும் கீழே போய்விட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது. 2011 சட்டமன்ற தேர்தலில் மதிமுக தேர்தலில் போட்டியிட வில்லை. இதனால் தனி சின்னம் ஒதுக்கப்படவில்லை. எனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அத்தொகுதியில் மதிமுக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் வகையில், மதிமுக தனது கட்சிக்கு பம்பரம்  சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம்  விண்ணப்பித்தது. உள்ளாட்சி தேர்தல் 6 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளதால் பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற முறையில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் சிறப்பு சலுகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 12ம் தேதிக்குள் மதிமுக போட்டியிடும் இடங்களை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் உள்ளாட்சி பதவிகள் குறித்த விவரங்களை மதிமுகவினர் திரட்டி வருகின்றனர்.

Related Stories: