நாடு முழுவதும் உள்ள டோல்கேட்டில் இன்று முதல் பாஸ்டேக் கட்டாயம்: தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்

சென்னை: நாடு முழுவதும் உள்ள தேசிய சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ‘பாஸ்டேக்’ கட்டண முறை கட்டாயமாகிறது. இந்த திட்டத்தினால், பஸ் மற்றும் லாரிகள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் வேகமாக செல்லும் என்பதால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்தியா முழுவதும் சுமார் 540 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதற்கு முடிவு கட்டும் வகையில், நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தானியங்கி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை (பாஸ்டேக்) அமல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்தமுறையை பயன்படுத்துவோர் எந்த சுங்கச்சாவடியிலும், தங்களது வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதற்காக பிரத்யேகமாக ‘பாஸ்டேக்’ என்ற வழி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், செல்வதற்கு ‘பாஸ்டேக்’ என்ற கார்டை பயன்படுத்த வேண்டும்.

இந்த கார்டை அனைத்து சுங்கச்சாவடியிலும் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக பாஸ்டேக் கார்டுகள் சில ஏஜென்ஸிகள் மூலமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு பெற்று ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். ஆன்லைனிலும் இதற்கான விண்ணப்பம்  உள்ளது. அதையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். பிறகு வங்கியின் மூலமாக முன்னரே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இதை ஆக்டிவேட் செய்வதற்கு வாகனத்தின் ஆர்சி புக், உரிமையாளரின் போட்டோ,  லைசென்ஸ், பான் கார்டு விபரங்கள் கேஓய்சி படிவமாக இருக்க வேண்டும். பாஸ்டேக் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பாங்கிங்  உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் மூலமாகவும் பணத்தை செலுத்தி ரீசார்ஜ் செய்து  கொள்ளலாம். பிறகு அந்த கார்டை தமது வாகனத்தில் உள்ள கண்ணாடியில் பொருத்திக் கொள்ள வேண்டும்.

 இவ்வாறு ரீசார்ஜ் செய்யப்பட்ட கார், சுங்கச்சாவடியில் நுழைந்த உடன், அங்கு பொருத்தப்பட்டுள்ள ஒரு இயந்திரம் கண்ணிமைக்கும் ெநாடியில் வாகனத்தின் வருகையை கண்டறிந்து பதிவு செய்து விடும். பிறகு நாம் முன்னரே ரீசார்ஜ் செய்து வைத்திருந்த பணத்தில் இருந்து, அந்த சுங்கச்சாவடியை நாம் பயன்படுத்தியதற்கான கட்டணம் கழிக்கப்பட்டு விடும். பிறகு அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு கம்பியும் தானாகவே திறந்து கொள்ளும். முன்னதாக இந்த கார்டை பயன்படுத்தும் வாகன ஓட்டி, சுங்கச்சாவடி உள்ள இடத்திலிருந்து 10 மீட்டர் தூரத்தில் இருந்தே 25-30 கி.மீ வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும்.  இந்தமுறையை பயன்படுத்துவதால், சுங்கச்சாவடியில் பணம் செலுத்துவதற்கு வாகனத்தை நீண்ட நேரம் நிறுத்தாமல், வாகன ஓட்டியால் வேகமாக பயணிக்க முடியும்.

இத்திட்டத்தை கடந்த 1ம் தேதியிலிருந்து செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காலஅவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து இன்று (டிசம்பர்-15) முதல் பாஸ்டேக் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதன்படி இத்திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் கட்டாயமாகிறது.

எத்தனை டோல்கேட்?

இந்தியாவில் உள்ள மொத்த சுங்கச்சாவடி களின் எண்ணிக்கை 540. இதில் தமிழகத்தில் 47 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதிக சுங்கச்சாவடி உள்ள மாநிலம் ராஜஸ்தான். இங்கு 71 டோல்கேட்கள் உள்ளன.

நீளமான என்ஹெச்-44

நாட்டில் உள்ள மொத்த நெடுஞ்சாலைகளின் நீளம் சுமார் 1,42,126 கி.மீ. இதில், மிக நீளமான நெடுஞ்சாலை என்எச்-44. இது காஷ்மீரில் துவங்கி கன்னியாகுமரியில் நிறைவு பெறுகிறது. இதன் நீளம் சுமார் 3,800 கி.மீ. மிகச்சிறிய நெடுஞ்சாலை என்எச் 47ஏ என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: