சரிந்து வரும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்

தமிழகத்தில் சுதந்திரத்திற்கு முன்பு, 1000 ஆண்களுக்கு 1044 பெண்கள் என்ற ரீதியில் பிறப்பு விகிதம் இருந்தது. இது கடந்த 50 ஆண்டுகளில், 5 முதல்  8 சதவீதம் வரை சரிந்துள்ளது. 2004ம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 936 பெண்கள் என்றிருந்த  விகிதம், 2011ம் ஆண்டில் 1000க்கு 853 என அடிமட்டத்துக்கு சென்று விட்டது. பல்வேறு   விழிப்புணர்வுகள், அரசின் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, 2011-12ம் ஆண்டில்  இந்த விகிதம் 1000க்கு 932 என்று மாறியது. 2012-13ம் ஆண்டில் 1000க்கு 918  என இருந்த  பாலின விகிதம், 2015-16ம் ஆண்டுகளில் 1000க்கு 912ஆக சரிந்தது. 2016-17ம் ஆண்டு  செப்டம்பரில் 1000க்கு 911 என்று குறைந்துள்ளது.  தமிழக மாவட்டங்களை பொறுத்தவரை சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு  விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர் சைல்டு லைன் அமைப்பினர்.

இந்நிலையில் நாடு முழுவதும் குடிமைப் பதிவு அமைப்பு  முறையில், பதிவு செய்யப்பட்ட பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்த  விவரங்களை தலைமைப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில்  பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் 10.16 சதவீதம்  குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கேரளத்தைத்  தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்  குறைந்துள்ளது. தமிழகத்தில் பெண்  குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததற்கு கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அதிநவீன  கருவிகள் வந்து விட்டது தான். பெண் குழந்தைகளாக இருந்தால்  கருவிலேயே அழிக்கப்படுவதும் தொடர்கிறது என்பது வேதனை அளிக்கும்  உண்மை.  

அதுமட்டுமின்றி, செயற்கை முறை கருத்தரிப்பின் போது  ஆண் குழந்தைகளை உருவாக்கச் செய்தல், ரத்தம் மூலமான மரபணு ஆய்வின் மூலம்  குழந்தைகளின் பாலினத்தைக் கண்டறிதல் ஆகியவையும் நவீன மருத்துவத்  தொழில்நுட்பத்தின் மூலம் இப்போது சாத்தியமாகியுள்ளது. இவை சட்டப்படி தடை  செய்யப்படவில்லை என்பதால் இவையும் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதற்கு  காரணமாகின்றன.

இவை அனைத்தும் பெண் குழந்தைகளை தவிர்ப்பதற்கான  வழிமுறைகள் தான்.  அதேநேரத்தில் பெண் குழந்தைகள் எதிர்காலச் சுமைகள் என்ற எண்ணத்தை மக்களின்,  குறிப்பாக கிராமப்புற மக்களின் மனங்களில் இருந்து அகற்றுவது தான்  இப்பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வாக அமையும். கிராமப்புறங்களில் வாழும் ஏழை  மக்களிடையே பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவை செலவு பிடிக்கும்  விஷயங்களாக இருப்பதும், பெண்களை வளர்த்தெடுக்கும் போது அவர்கள்  எதிர் கொள்ளும் பிரச்னைகளும் தான் பெண் குழந்தைகளை சுமையாக நினைக்க  வைக்கின்றன.இந்த எண்ணத்தை மாற்றவும், பெண் குழந்தைகள் சாபமல்ல... வரம் என்ற  எண்ணத்தை ஏற்படுத்தவும் விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ள வேண்டும். இதுவே அபாய அவலங்களை கட்டுப்படுத்த வழிவகுக்கும் என்பது ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளோரின் ஆதங்கம்.  

 கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய அளவில் 24 முதல் 35 வயதுக்குட்பட்ட 30 சதவீத ஆண்கள், திருமணம் செய்யாமல் இருக்கின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மணமுடிக்க பெண் கிடைக்காததே முக்கிய காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே சென்றால் எதிர்காலத்தில் ஆண்களுக்கு மணமுடிக்க பெண்கள் கிடைக்கமாட்டார்கள்.

2018ல் குறைந்த பாலின விகிதம்

தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு  10.16 சதவீதம் அளவு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2007ம் ஆண்டு 1,000 ஆண்களுக்கு 935 பெண்கள் என்ற எண்ணிக்கையில் ஆண் பெண் பிறப்பு விகிதம் இருந்தது. ஆனால் அது 2016ம் ஆண்டு 840 என்ற அளவில் குறைந்தது. 2018ம் ஆண்டு 933 ஆக உயர்ந்தது என்றாலும் சேலம், ராமநாதபுரம், திருவள்ளூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 35 முதல் 48 வரை குறைந்துள்ளது. சென்னை, கோவை போன்ற வளர்ந்த நகரங்களிலும் இந்த அவல நிலை தொடர்வது குறிப்பிடத்தக்கது.

ஆண் குழந்தை  பிறந்தால் பெண்ணுக்கு ஆர்வமில்லை

‘‘ஒரு தம்பதிக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தால், அடுத்து பெண் குழந்தை பெற்றுக்கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. கருவில் தொடங்கி கர்ப்பிணியாகும் வரை, கர்ப்பிணிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இது தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. தொட்டில் குழந்தைகள் மையத்திற்கு வரும்  குழந்தைகளின் எண்ணிக்கை சரிந்ததற்கு இதை ஒரு காரணமாக கூறலாம். ஆனால், கருவிலேயே பாலினம் கண்டறிந்து பெண் சிசுவை சிதைக்கக்  கூடாது  என்ற எண்ணம், ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் வரவேண்டும்.  அப்ேபாது தான் சரிந்து வரும் பெண் குழந்தை பிறப்பு விகிதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்,’’ என்கின்றனர் மருத்துவர்கள்.

25 கர்ப்பிணிகளில் ஒருவர் கருகலைப்பு

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘‘25 கர்ப்பிணி பெண்களில் ஒருவர் கருகலைப்பு செய்வதாகத் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி வரமா, சாபமா என்ற பட்டிமன்றம் நிச்சயம் இந்த விஷயத்தில் அவசியமாகிறது. பெண் குழந்தைகளை கருவிலேயே கலைப்பது அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் போலி மருத்துவர்கள் கருக்கலைப்புகளை அதிக அளவு செய்து வருகின்றனர். அவ்வப்போது அவர்கள் கைது செய்யப்பட்டாலும், முழுமையாக அவர்களைத் தடுக்க முடியவில்லை,’’ என்பது வேதனை.

பெண் குழந்தைகள் பிறப்பு

சேலம் சரக லேட்டஸ்ட் விகிதம்

பாலினம்                     ஆண்    பெண்

சேலம்                      1000     915

நாமக்கல்                       1000    926

தர்மபுரி                       1000    943

கிருஷ்ணகிரி     1000    958

Related Stories: