தமிழகம் முழுவதும் நடந்து வரும் வீட்டுவசதி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வரும் வீட்டுவசதி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுவசதி திட்ட பணிகள் குறித்து விரிவான ஆய்வு  மேற்கொண்டார்.  அப்போது, பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், குடிசை மாற்று வாரியத்தால், தமிழகத்தில் இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகள், ஒப்பந்தம் கோரப்பட உள்ளவை மற்றும் மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டியவை குறித்து, கோட்ட வாரியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்தார்.

பின்னர், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வீட்டு வசதி திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்கு அனைத்து அதிகாரிகளும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் உத்தரவிட்டார். ஆய்வு கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) கார்த்திகேயன், குடிசை மாற்று வாரிய இணை மேலாண்மை இயக்குநர் கோபால சுந்தரராஜ், வாரிய தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் அனைத்து கோட்ட செயற்பொறியாளர்கள்  கலந்துகொண்டனர். 

Related Stories: