×

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஸ்ரீநகர்: பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து  கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்ட பின்னர், தேசிய மாநாட்டு கட்சியின்  தலைவர் பரூக் அப்துல்லா, துணை தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி  தலைவர் மெகபூபா முப்தி உள்பட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது  செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையில், பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பரூக் அப்துல்லா  இருப்பிடம் குறித்து மத்திய அரசு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். ஆனால், செப்டம்பர் 15-ம் தேதியே பரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்களை விசாரணையின்றி இரண்டு ஆண்டுகளுக்கு காவலில் வைத்திருக்க  முடியும். இதையடுத்து பரூக் அப்துல்லா தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன்பிரதேச நிர்வாகம் பரூக் அப்துல்லாவுக்கான காவலை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள குப்கார் சாலையில் உள்ள வீட்டில் வசித்துவரும் பரூக் அப்துல்லாவின் வீடு கிளைச்சிறையாக மாற்றப்பட்டுள்ளது. பொதுப்பாதுகாப்புச் சட்டத்தை பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா கடந்த 1978-ம் ஆண்டு கொண்டுவந்தார். ஆனால், இந்த சட்டம் எந்த அரசியல்வாதியும் மீது பாயாத நிலையில் தந்தை கொண்டுவந்த சட்டம் முதல்முறையாக மகனான பரூக் அப்துல்லா மீது பாய்ந்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை விசாரணையின்றி 2 ஆண்டுகள் வரை தடுப்புக்காவலில் வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Farooq Abdullah ,Kashmir , Farooq Abdullah, Home Guard, Ext
× RELATED உடல்நிலை காரணமாக பரூக் அப்துல்லா...