சப்பாத்து பாலமான அகழிகள்; வனத்துறையினர் அலட்சியம்... காளிகேசத்தில் உலாவிய யானை கூட்டம்

* இன்று அதிகாலை பரபரப்பு

* பீதியில் தொழிலாளர்கள்

பூதப்பாண்டி: காளிகேசம் மலையின் மேல் தமிழக அரசுக்கு சொந்தமான 9 ரப்பர் எஸ்டேட்டுகள் உள்ளன. இதேபோல் தனியாருக்கு சொந்தமாக கிராம்பு, ஏலக்காய், நல்லமிளகு, வாழை என்று 500 எஸ்டேட்டுகளும் உள்ளன. இங்கு வேலைக்காக தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, அருமநல்லூர், திடல், குலசேகரம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகமாக தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். அதன்படி தினசரி சுமார் 7 ஆயிரம் பேர் வேலைக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது. அதிகாலை சுமார் 5 மணிக்கு செல்லும் தொழிலளார்கள் மதியம் சுமார் 1 மணிக்கு திரும்புகின்றனர். இது தவிர தனியார் எஸ்டேட்டுகளில் திருச்சி பகுதியை சேர்ந்த பலர் குடும்பத்துடன் தங்கி இருந்து வருகின்றனர். யானை, கரடிகள் கூட்டத்தால் தொழிலாளர்கள் அடிக்கடி பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் விரதம் இருந்து பக்தர்கள் செல்கின்றனர். ஆகவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி யானை, புலி உள்பட வன விலங்குகள் பட்டாசு வெடித்து விரட்டப்படுகின்றன. பட்டாசு சத்தத்துக்கு பயந்து வன விலங்குகள் காளிகேசம் மலை பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றன. இப்படி படையெடுக்கின்ற வன விலங்குகளால் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. வனவிலங்குகளால் தொழிலாளர்கள் சிலர் கடந்த காலங்களில் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அதிக அளவில் வனவிலங்குகள் ஆண்டுதோறும் படையெடுக்க தொடங்கிவிடுகின்றன. இந்த மாதங்களில்தான் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்ல தொடங்குவார்களாம்.

ஆகவே பட்டாசு சத்தத்துக்கு பயந்து விலங்குகள் வருகின்றன என்கின்றனர் தொழிலாளர்கள். காளிகேசம் மலை பகுதிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வன விலங்குகளால் ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் காட்டு பகுதியில் ராட்சத அளவிலான அகழிகள் வெட்டப்பட்டு உள்ளன. 12 அடி ஆழத்திலும், 8 முதல் 10 அடி வரையிலான வீதியிலும் இந்த அகழிகள் வெட்டப்பட்டு இருந்தன. இந்த ராட்சத அகழிகளை தாண்டி யானை, சிறுத்தை, புலி ஆகிய மிருகங்கள் காளிகேசம் வருவது முழுமையாக இல்லாவிட்டாலும் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தன. பல ஆண்டுக்கு முன்பு வெட்டப்பட்ட இந்த அகழிகளை வனத்துறையினர் முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குமரியை ஓகி புயல் புரட்டிப்போட்டு சுமார் 3 வருடங்கள் ஆகிவிட்டது.

இந்த ஓகி புயல் காளிகேசம் மலை பகுதியில் இருந்த அகழிகளையும் விட்டு வைக்கவில்லை. அகழிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதாக தெரிகிறது. ஆனால் வனத்துறையினர் அவற்றை சீரமைப்பதில் ஒருவித மெத்தன போக்கை கடைபிடிப்பதாகவே தெரிகிறது. 12 அடி ஆழமுள்ள அகழிகள் பராமரிக்கப்படாததால் தற்போது சப்பாத்து பாலம் போல காணப்படுகிறதாம். இது வனவிலங்களுக்கு ஏறி இறங்க வசதியாக இருக்கிறதாம். இதனால் அதிகாலை வேலைக்கு செல்லும் 7 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் தனியார் எஸ்டேட்டுகளில் குடும்பமாக தங்கி இருக்கின்ற தொழிலாளர்களும் தினசரி உயிரை கையில் பிடித்துக் கொண்டு நிம்மதி இல்லாமல் வாழ்கின்றனர். ஆகவே இது விஷயத்தில் வனத்துறையினர் இனியும் காலம் தாழ்த்தாமல் 12 அடி ஆழத்தில் வெட்டப்பட்ட அகழிகளை முறையாக தூர்வார வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

யானை கூட்டம் உலா

காளிகேசம் மலை பகுதியில் தற்போது யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வரத் தொடங்கி உள்ளனவாம். இன்று அதிகாலை வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் 6 யானைகள் கூட்டமாக உலா வருவதை பார்த்து உள்ளனர். இவைகளால் எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம். ஆகவே இப்போதே பயம் அவர்களை தொற்ற தொடங்கி இருக்கிறது. ஆகவே தொழிலாளர்கள் ஒரு வித நடுக்கத்துடன் தினசரி வேலைக்கு சென்று வருகின்றார்களாம்.

காட்டுமாடு, செந்நாயால் பீதி

காளிகேசம் வனப்பகுதியில் பெரும்பாலும் யானை, புலி, சிறுத்தைளின் நடமாட்டத்தை பார்க்க முடிகிறது. இருப்பினும் கரடி கூட்டத்தால் தான் தொழிலாளர்களின் உயிருக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது எந்த வருடமும் இல்லாமல் புதிய வரவாக காட்டு மாடுகள் அதிகமாக வரத் தொடங்கி உள்ளன. இன்று அதிகாலை சுமார் 20க்கும் மேற் பட்ட காட்டு மாடுகள் காடுகளில் உலா வருவதை அதிகாலை வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். காட்டு மாடுகள், யானைக்கு சமமானது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்று தொழிலாளர்கள் கூறினர். இதே போல் செந்நாய்களும் கூட்டம் கூட்டமாக காளிகேசம் மலை பகுதிக்கு படையெடுக்க தொடங்கி உள்ளன. இதனால் அதிகாலை வேலைக்கு வந்து செல்கின்ற மற்றும் எஸ்டேட்டுகளில் தங்கி உள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், உஷாராகவும் இருக்க எஸ்டேட் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்னர்.

4 மாதம் தஞ்சம்

காளிகேசத்துக்கு ஆண்டுதோறும் ஐனவரி, பிப்ரவரி மாதங்களில் படையெடுக்கும் யானைகள் மார்ச், ஏப்ரல் மாதங்கள் என்று சுமார் 4 மாதங்கள் தொடர்ந்து இந்த மலை பகுதியில் தஞ்சம் அடைகின்றன. காரணம் மார்ச், ஏப்ரல் மாதங்கள் பலாப்பழ சீசனாம். மலை மேல் வீசுகின்ற பாலப்பழ வாசனைக்கு யானைகள் இங்கிருந்த செல்வது இல்லையாம். 4 மாதங்கள் யானைகள் இங்கேயே தொடர்ந்து தங்கிவிடுவதால் காளிகேசம் வன பகுதி யானைகளின் சரணாலயம் போல இந்த 4 மாதமும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: