வாணியம்பாடி அருகே மலை கிராமத்தில் 7 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களிடம் குறைகேட்ட கலெக்டர்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் நெக்னாமலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து இன்றுவரை சரியான சாலை வசதி இல்லை. இங்குள்ள மக்களின் அனைத்து தேவைகளுக்கும் மலை அடிவாரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தினமும் நடந்து சென்று வருகின்றனர். சாலை வசதி கேட்டு அரசுக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும்  பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லையாம். இதனால் இந்த மலைகிராமத்தில் உள்ளவர்கள் பிழைப்புதேடி வெளியூர் சென்று தங்கி வேலை செய்துவரும் அவலநிலை உள்ளது.

இந்நிலையில் இந்த மலை கிராமத்திலிருந்து முனிசாமி என்பவர் வேலை தேடி கோயம்புத்தூர் அடுத்த சிங்காநல்லூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை வந்தார். கடந்த 9ந்தேதி முனிசாமி மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து முனிசாமியின் சடலத்தையும், 7 மாத கர்ப்பிணி மனைவியையும் டோலிகட்டி மலை கிராம மக்கள் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்த நெக்னாமலை தூக்கிச்சென்றனர். மின்வசதி இல்லாத காரணத்தினால்  கைகளில் பழைய சைக்கிள் டயர்களை எரிய விட்டு தீப்பந்தமாக கைகளில் ஏந்தி சென்றனர்.  முதலில் வேலூர் மாவட்டமாக இருந்த இந்த மலைக்கிராமம் தற்போது 3ஆக பிரிக்கப்பட்டதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் சாலை வசதி இல்லாத அந்த மலை கிராமத்திற்கு சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் கரடுமுரடான ஒத்தையடி பாதையில் நடந்தே சென்றார்.

அவருடன் வாணியம்பாடி தாசில்தார் செல்வபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தி  உட்பட  வருவாய் துறையினரும் நடந்து சென்றனர். கோவையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த  முனுசாமியின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு கலெக்டர் ஆறுதல் கூறினர். பின்னர் கணவரை இழந்து  ஆதரவற்று உள்ள கர்ப்பிணிக்கும் அரசு தரப்பில் உதவிகள் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி கூறினார். பின்னர் அந்த மலைக்கிராமத்தில் உள்ள  குழந்தைகளிடம் சிறிதுநேரம் உரையாடினார். மலை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்றுஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.பின்னர் அந்த மலைக்கிராமத்திற்கு அனைத்து வசதிகளும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். 1980-ல் குணாநிதி என்ற கலெக்டரும், அதன் பின்னர்  2012ம் ஆண்டு கலெக்டர் சங்கர் என்பவரும் தற்போது 3வதாக திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் அந்த மலைக்கிராமத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது: வனத்துறையிடம் பேசி சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வனத்துறையில் இருந்து  எடுக்கப்படும் இடத்திற்கு மாற்று இடம் வனத்துறையினருக்கு ஒதுக்கீடு செய்து  விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றார். மேலும் கோவையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த முனுசாமியின் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நெக்னாமலை கிராம மக்களின் அடிப்படை வசதிகள்  மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: