மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது: ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 2 அடி உயரமுள்ள சாந்தி வேட்புமனு தாக்கல்

பெரம்பலூர்: பெரம்பலூரில் 2 அடி உயரமுள்ள மாற்றுத்திறனாளி பெண், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கி நாளை மறுநாள் வரை நடக்கிறது. பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எளம்பலூர் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு அங்குள்ள சமத்துவபுரத்தில் குடியிருக்கும் சாந்தி (53) என்ற மாற்றுத்திறனாளி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் 2 அடி உயரமே உள்ளார். இளம்பிள்ளை வாதம் தாக்கியதால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டதால் திருமணம் செய்து கொள்ளாத இவர் எளம்பலூர் சமத்துவபுரம் பகுதியில் பெட்டிக்கடை வைத்து ஜீவனம் செய்து வருகிறார்.

சாந்தி தனது ஊர் பெண்களுக்கு உதவி செய்யும் நோக்கில் மகளிர் சுய உதவி குழுவில் இணைந்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சென்று தானே பலருக்கும் தேவையான உதவிகளை பெற்று தந்து உள்ளார்.. இதன்மூலம் அப்பகுதியில் உள்ள அனைவரும் அறிந்திருக்கக்கூடிய நபரான இவர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று தனது ஊர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பெற்று தருவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது தான் என அவரை பார்த்த மற்ற வேட்பாளர்களும், அங்கு திரண்டிருந்த மக்களும் பெருமையுடன் கூறினர்.

Related Stories: