மண்டல காலத்தில் முதன்முறையாக சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டதால் 10 மணிநேரத்துக்கும் மேல் நீண்ட வரிசையில் காத்து நின்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நடைதிறந்து ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

இதற்கிடையே கடந்த 3 வாரங்களாக பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். இருந்த போதிலும் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்காமல் எளிதில் தரிசனம் செய்து சென்றனர். ஆனால் நேற்று இந்த மண்டல காலத்தில் முதல் முறையாக மிக அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் தரிசனத்துக்கு நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் 18ம் படி முதல் சரங்குத்தி வரை பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். நேற்று காலை 8 மணிக்கு வரிசையில் நின்ற பக்தர்களால் மாலை 6 மணிக்கு பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து போலீசார் பம்பை உள்பட பல்வேறு பகுதிகளில் பக்தர்களை தடுத்து நிறுத்தி கட்டம் கட்டமாக அனுப்பி வைத்தனர்.

ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது. நேற்று பக்தர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து அனைத்து பக்தர்களும் ஒரே வரிசையில்தான் செல்ல முடிந்தது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.100 கோடி வருமானம்

சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து இந்த மண்டல காலத்தில் நடை திறந்து நேற்று வரை 27 நாட்களில் மொத்த வருமானம் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் ரூ.60 கோடி மட்டுமே கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ரூ. 40 கோடிக்கு மேல் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

இதில் உண்டியல் மூலம் மட்டும் ரூ.35 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.21 கோடி மட்டுமே கிடைத்திருந்தது. இது தவிர ரூ.6 கோடி மதிப்பிலான நாணயங்கள் எண்ணும் பணி நடந்து வருகிறது. நேற்று வரை 15.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தினமும் சராசரியாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: