×

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்: அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், தங்களது குடிமக்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

நியூயார்க்: நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி 5 நாட்களாக வன்முறை தலைவிரித்தாடியது. இந்த கலவரம் டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் கேரளாவிலும் பரவியது. வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவமும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன. இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் போராட்டக்காரர்கள் சாலை மற்றும் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர். கார்கள், இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பெல்டங்கா ரயில் நிலையத்திற்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். அசாமில் 10 மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் கவுகாத்தியில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இந்தியாவில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய இருந்தார். இதற்காக நாளை அவர் டெல்லி வர இருந்தார். ஆனால், அசாம் போராட்டம் காரணமாக, பாதுகாப்பு கருதி அவருடைய இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த பகுதிகளுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், தங்களது குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில்;  குடியுரிமை மசோதா நிறைவேற்றப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் பின்னணியில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் அசாமிற்கான அதிகாரப்பூர்வ பயணத்தை தற்காலிகமாக நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இங்கிலாந்து அரசு வெளியிட்ட அறிக்கையில்: குடியுரிமை மசோதாவிற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. முக்கியமாக, வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் திரிபுராவில் வன்முறை இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்படலாம். கட்டாயம் பயணம் செய்ய வேண்டிய தேவை இருந்தால், சாத்தியமான பயணிகள் சமீபத்திய தகவல்களுக்கு உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் பிரான்ஸ், இஸ்ரேல் அரசுகளும், தனது நாட்டு குடிமக்களை கவனமுடன் இருக்கும்படி எச்சரித்துள்ளது.

Tags : Countries ,citizens ,fight ,UK ,United States , Citizenship Bill, USA, UK
× RELATED வெளிநாடுகளில் இருந்து குஜராத்,...