விபத்துகளை ஏற்படுத்தும் காப்பீடு இல்லாத வாகனங்களை, ஏலம் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை : காப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்து ஏலத்தில் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டப்படி ஒரு வாகனம்  விபத்தில் சிக்கினாலோ அல்லது விபத்தை ஏற்படுத்தினாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் இழப்பு, உடல் உறுப்பு இழப்பு அல்லது சொத்துக்கு சேதம் ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து உரிய இழப்பீடு பெற முடியும். ஆனால் அந்த வாகனம் காப்பீட்டு செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே இழப்பீட்டை பெற முடியும்.

ஒரு வேளை காப்பீடு செய்யப்படாமல் இருந்தால் இழப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படும். இந்த சிக்கல்களை போக்கும் வண்ணம் மோட்டார் வாகன இழப்பீட்டுத் தீர்ப்பாய சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி விபத்தில் மரணம், காயம், சொத்து சேதம் ஏற்படுத்திய வாகனமானது 3வது நபர் காப்பீடு செய்யப்படவில்லை என்றாலோ, வாகன உரிமையாளர் விபத்து விசாரணை  அதிகாரியிடம் காப்பீட்டின் ஆவணங்களை  அளிக்காத நிலையிலோ அந்த வாகனத்தை வெளியில் எடுத்துச் செல்ல எந்த நீதிமன்றமும் அனுமதிக்கக் கூடாது.

அதே போல விபத்தில் ஏற்பட்ட இழப்புக்கு ஈடாக பிணைத் தொகையை வாகன உரிமையாளர்கள் செலுத்தும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. மேலும் காப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தி உயிர் இழப்பையோ அல்லது காயத்தையோ ஏற்படுத்தினால் அந்த வாகனத்தை ஏலம் விட்டு 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விபத்து நிகழ்ந்த பகுதியில் உள்ள மாஜிஸ்திரேட் அல்லது காவல் துறை உயர் அதிகாரிகள் வாகனங்களை ஏலம் விடுவார்கள் என்றும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. வாகன ஓட்டிகள் இனியாவது தங்கள் வாகனங்களுக்கு அவசியம் 3ம் நபர் காப்பீட்டை செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த சட்டத்திருத்தம்.

Related Stories: