அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஒவ்வொரு குடும்பமும் ரூ.11 நிதி அளிக்க வேண்டும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை

பகோதரி: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஒவ்வொரு குடும்பமும் ரூ.11 நிதி அளிக்க வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை விடுத்துள்ளார். 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட தேர்தல் நவம்பர் 30ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் டிசம்பர் 07ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் கடந்த டிசம்பர் 12ம் தேதியும் நடைபெற்றது. 4ம் கட்ட தேர்தல் டிசம்பர் 16 அன்றும், 5ம் கட்ட தேர்தல் டிசம்பர் 20ம் தேதியன்றும் நடைபெற உள்ளன. இதில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 23ம் தேதியன்று எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில், 4ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள பகோதரில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜகவுக்கு ஆதரவு கோரி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத்தை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பதாகவும் அக்கட்சிகள் பாகிஸ்தான் மொழியில் பேசுவதாகவும் விமர்சித்தார்.

500 ஆண்டு கால அயோத்தி நில சர்ச்சை பிரதமர் மோடியின் முயற்சியால் முடிவுக்கு வந்திருப்பதாகவும் யோகி ஆதித்யநாத் புகழாரம் சூட்டினார். விரைவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என சூளுரைத்த யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் கட்ட ஜார்கண்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தலா 11 ரூபாயுடன் ஒரு செங்கல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ராம ராஜ்ஜியம் என்பது எந்தவிதமான பாகுபாடும் இல்லாதது என தெரிவித்த அவர், சமூகத்தின் பங்களிப்பிலேயே ராமராஜ்யம் இயங்குவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதனையடுத்து இதற்கான பணிகள் துவங்க உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் ராமநவமி அன்று இதற்கான பணிகள் துவங்கி 2022 ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: