கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு விமானத்தில் பறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு : சரக்கு போக்குவரத்து அளவும் உயர்ந்தது

கோவை, : கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு பறப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சரக்கு போக்குவரத்து அளவும் உயர்ந்துள்ளது. கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையம் 600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, வாரத்திற்கு 9 சர்வதேச விமானங்களும், 350 முறை உள்நாட்டு விமானங்களும் வந்து, செல்கின்றன. இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை 9 ஆயிரம் அடியாக உள்ளது. சர்வதேச அளவில் இயக்கப்படும் பெரிய அளவிலான விமானங்கள் வந்து செல்ல ஓடுபாதை 12 ஆயிரம் அடியாக இருக்கவேண்டும். ஓடுபாதை நீளம்  அதிகரிப்பு மட்டுமின்றி, கூடுதல் விமானம் நிறுத்துமிடம், கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக, தமிழக அரசு, 850 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்க, விமான நிலைய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 2002 முதல் நடந்து வருகிறது. முதல்கட்டமாக, 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது. தற்போது, இழப்பீட்டு தொகையாக தமிழக அரசு ரூ.189 கோடி ஒதுக்கியுள்ளது. இத்தொகையை, முறைப்படி பிரித்து வழங்கும் பணியை கோவை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதுஒருபுறம் இருக்க, இன்னொரு புறம், கோவை விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில், புதுடெல்லி, மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களுக்கு அன்றாடம் விமானம் இயக்கப்படுகிறது. தவிர, கொழும்பு (இலங்கை), சிங்கப்பூர், சார்ஜா ஆகிய நாடுகளுக்கும் விமானச்சேவை உள்ளது. சர்வதேச விமான சேவையை, ஸ்பைஸ் ஜெட், இன்டிகோ, ஏர் இந்தியா ஆகிய விமான நிறுவனங்கள் வழங்குகின்றன.

கோவை விமான நிலையத்தில் இருந்து கடந்த 2016-17ம் ஆண்டில் 11,14,245 உள்நாட்டு பயணிகள், 80,717 வெளிநாட்டு பயணிகள் என மொத்தம் 11,94,962 பேர் பயணித்துள்ளனர். 2017-18ம் ஆண்டில் உள்நாட்டு பயணிகள் 12,12,221 பேர், வெளிநாட்டு பயணிகள் 98,724 பேர் என மொத்தம் 13,10,945 பேர் பயணித்துள்ளனர். 2018-19ம் ஆண்டில் உள்நாட்டு பயணிகள் 15,68,275 பேர், வெளிநாட்டு பயணிகள் 1,40,176 பேர் என மொத்தம் 17,08,451 பேர் பயணித்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் (2019-2020) அக்டோபர் வரை உள்நாட்டு பயணிகள் 14,72,157 பேர்,  வெளிநாட்டு பயணிகள் 1,42,847 பேர் என மொத்தம் 16,15,004 பேர் பயணித்துள்ளனர்.

நடப்பு நிதியாண்டு நிறைவடைய இன்னும் 4 மாதங்கள் உள்ளன. இந்த 4 மாதங்களில் பயணிக்கும், பயணிகளின் எண்ணிக்கையை சேர்த்தால், நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து கடந்த 2018-19ம் ஆண்டில் மட்டும் 25,253 முறை விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதேபோல், சரக்கு போக்குவரத்து (கார்கோ) கையாள்வதிலும் கோவை விமான நிலையம் சாதனை படைத்து வருகிறது. அதாவது, கடந்த 2016-17ம் ஆண்டில் உள்நாடுகளுக்கு 5,899 டன், வெளிநாடுகளுக்கு 688 டன் என மொத்தம் 6,587 டன் சரக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டில் உள்நாடுகளுக்கு 5,251 டன், வெளிநாடுகளுக்கு 734 டன் என மொத்தம் 5,985 டன் சரக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டில் உள்நாடுகளுக்கு 6,654 டன், வெளிநாடுகளுக்கு 1,253 டன் என மொத்தம் 7,907 டன் சரக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் (2019-2020) அக்டோபர் வரை உள்நாடுகளுக்கு 5,868 டன், வெளிநாடுகளுக்கு 1,558 டன் என மொத்தம் 7,456 டன் சரக்கு அனுப்பப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு முடிவில், சரக்கு அனுப்பும் அளவு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுபற்றி கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘’கோவை விமான நிலையத்தில், கடந்த 4 ஆண்டுகளாக பயணிகள் எண்ணிக்கை மற்றும் சரக்கு கையாளும் அளவு அதிகரித்து வருகிறது. விமான நிலைய கட்டமைப்பை மேம்படுத்தினால் இன்னும் கூடுதல் விமானங்கள் வந்து, செல்லும். அதற்கு ஏற்ப, பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சரக்கு போக்குவரத்து இன்னும் உயரும்’’ என்றனர்.

Related Stories: