ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி : நாளை துவக்கம்

பொள்ளாச்சி, :   ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களில், குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நாளை முதல் துவங்குகிறது என வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனகோட்டம், உடுமலை வனக்கோட்டம் என இரண்டு கோட்டங்களிலும் மொத்தம் 6 வனச்சரங்கள் உள்ளன. இதில் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, டாப்சிலிப் (உலாந்தி), மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்களில் அமைந்துள்ள சுற்றுலா பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு கட்டமாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும்.

இதில், வனத்துறையினர் மட்டுமின்றி இயற்கை ஆர்வலர்கள் பலர் கலந்து கொள்வார்கள்.இந்த ஆண்டு கடந்த மே மாதம் யானை, வரையாடு, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளின் முதற்கட்ட கணக்கெடுப்பு பணி நடந்தது.இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக புலிகள் உள்ளிட்ட அனைத்து வன விலங்குகளின் கணக்கெடுப்பு பணி நாளை 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை என தொடர்ந்து 7நாட்கள் நடக்க உள்ளது. முன்னதாக இன்று 14ம் தேதி, வனவிலங்குகள் கணக்கெடுப்பில் ஈடுபடும் வன ஊழியார்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அட்டகட்டியில் சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளன.

இதில் விலங்குகள் கணக்கெடுப்பது எப்படி, எவ்வாறு கையாள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முறைகள் குறித்து அறிவுறுத்தப்பட உள்ளது.

 

இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் கூறியதாவது: தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதலின்படி, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரக பகுதியில் வரும் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

அதே நேரத்தில் கண்ணில் தென்படும், புலி உள்ளிட்ட பிற வன விலங்குகளின் கணக்கெடுப்பும் நடக்க உள்ளது. இந்த கணக்கெடுப்பில் வன அலுவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள், வன ஊழியர்கள்,  இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக அவர்களுக்கு புலிகள் மற்றும் பிற வனவிலங்குகள் கணக்கெடுப்பது குறித்து அட்டக்கட்டியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வனவிலங்கு கணக்கெடுப்பில் ஈடுபடுவோருக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது’ என்றனர்.

Related Stories: