×

ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கு: 3 மாதங்களுக்கு பின் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது!

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, 3 மாதங்களுக்கு பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி பல்வேறு விதமான நோய்களை பரப்புவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே 22ம் தேதி  நடந்த போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

அதன்படி மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதித்து, தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம் என்று தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்தது. இதனிடையே நீதிபதி சிவஞானம் கடந்த 3 மாதங்களாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வந்ததால், ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், ஸ்டெர்லைட் வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை 5 நாட்களுக்கு, ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை கடைசியாக ஆகஸ்ட் 30 தேதி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sterlite ,plant ,High Court ,hearing , Tuticorin, Sterlite plant, case, trial, Madras High Court
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...