வடகிழக்கு மாநிலங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை நம்ப வேண்டாம்: இந்திய ராணுவம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை நம்ப வேண்டாம் என இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள்.

எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி 5 நாட்களாக வன்முறை தலைவிரித்தாடியது. இந்த கலவரம் டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் கேரளாவிலும் பரவியது. இதனையடுத்து வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவமும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன. இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் போராட்டக்காரர்கள் சாலை மற்றும் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர். கார்கள், இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

பெல்டங்கா ரயில் நிலையத்திற்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், இந்திய ராணுவம் இதனை மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சமூக வலைதளங்களில் இந்திய ராணுவம் குறித்து பரப்பப்படும் வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று பதிவிடப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், 26 கம்பெனி ராணுவத்தினர் முழு வீச்சில் பாதுகாப்பு பணியில் இறங்கி உள்ளனர்.

Related Stories: