சென்னை கோயம்பேடு சந்தையில் மீண்டும் உயர்ந்த வெங்காயத்தின் விலை: சின்ன வெங்காயம் கிலோ ரூ.130 ரூபாய்க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை நேற்றையை விலையை விட சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தற்போது மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். வெங்காய விளைச்சல் குறைவால், விலை 200 ரூபாய் வரை கடைகளில் விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெங்காயம் தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டன. அதன்படி எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் பெங்களூருவில் வெங்காயம் வரத்து அதிகரித்தது.

அதேபோல், தமிழ்நாட்டில் எகிப்து வெங்காயம் இறக்குமதியாலும் கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வரத்து சற்று அதிகமாகி இருப்பதாலும் அதன் விலை சற்று குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்றுடன் ஒப்பிடும் போது வெங்காயம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 10 ரூபாய் உயர்ந்து 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கு 5 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி தினசரி அமைச்சர்கள் குழுவைக் கூட்டி விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.

Related Stories: