நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர் திடீர் மாயம்

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் விவசாயி காந்தி (61). இவரது மனைவி ஈஸ்வரி (52). மகன் மனோஜ்குமார் (30). டாக்டரான இவர், தனது 16 வயது அக்கா மகளுடன் கடந்த ஆண்டு காணாமல் போனார். இதுகுறித்து அவரது தந்தை விசாரித்தபோது, திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காந்தி, தனது மகன், பேத்தியை விடுவிக்குமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த நித்யானந்தாவின் சீடர்கள், டாக்டர் மனோஜ்குமார் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் இருப்பதாக கூறினர். இதையடுத்து தனது மகனை மீட்டுத்தருமாறு திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்தில் காந்தி புகார் அளித்தார்.  இதையடுத்து பெரியகுளம் வடகரை போலீசார், டாக்டர் மனோஜ்குமாரை காணவில்லையென வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஆண்டு பிப். 6ம் தேதி பிடதி ஆசிரமத்தில் இருந்து டாக்டர் மற்றும் அவருடன் சென்ற 16 வயது சிறுமியை, போலீசார் மீட்டு நீதிமன்ற ஒப்புதலோடு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தியதால் சமாதானம் அடைந்த டாக்டர் மனோஜ்குமார், தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். ஆனால் பணிக்கு செல்வதாக கூறிச் சென்ற மனோஜ்குமார், கடந்த 4 மாதங்களாக காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்று அவரது தந்தை காந்தி, மீண்டும் பெரியகுளம் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதன்படி பெரியகுளம் வடகரை காவல்துறையினர், அவரை தேடி வருகின்றனர். மேலும், டாக்டர் மனோஜ்குமார் மீண்டும் நித்யானந்தா ஆசிரமம் சென்றிருக்கலாமா என்றும் சந்தேகம் அடைந்துள்ளனர்.

Related Stories: