ஆபாசம் படம் பார்த்த விவகாரத்தில் டாக்டர், தொழிலதிபர்கள் உள்பட 15 பேரை கைது செய்ய தீவிரம் : தனிப்படை போலீசார் நடவடிக்கை

திருச்சி: ஆபாச படம் பார்த்த விவகாரம் தொடர்பாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். படங்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்த பாலோயர்களான டாக்டர்கள், தொழிலதிபர்கள் உள்பட 15 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். திருச்சி காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (42). இவர் செல்போனில் பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை அதிகம் பார்த்ததுடன், அந்த படங்களை சமூக வலைதலங்களில் தனது பாலோயர்களுக்கும் அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரது பேஸ்புக், வாட்ஸ்அப்பை முடக்கினர்.நேற்றுமுன்தினம் காலை அவரது வீட்டுக்கு சென்ற கன்டோன்மென்ட் மகளிர் போலீசார் அதிரடியாக சென்று கிறிஸ்டோபரை கைது செய்து போக்சோ சட்டப்படியும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் வழக்குப்பதிந்தனர். திருச்சி மகிளா நீதிமன்றத்தில் கிறிஸ்டோபர் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆபாச படம் பார்த்ததாக தமிழகத்திலேயே முதல் கைதாக கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபரின் பேஸ்புக் கணக்கில் பாலோயர்களாக 300 பேர் இருந்துள்ளனர். அவர்களுக்கு  கிறிஸ்டோபர் ஆபாச படங்களை அனுப்பி இருப்பதால் அந்த 300 பேரின் முகவரியையும் தனிப்படை போலீசார் சேகரித்து உள்ளனர். இந்த 300 பேரில் திருச்சியில் மட்டும் 100 பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர வாட்ஸ்அப்பில் 15 குரூப்புகளுக்கு கிறிஸ்டோபர் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். அவர்கள் குறித்தும் ரகசியமாக விசாரணை நடக்கிறது. இதனிடையே திருச்சியை சேர்ந்த 100 பேரில் 15 பேர், கிறிஸ்டோபர் அனுப்பிய படங்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்திருப்பதால் அவர்களின் முழு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் டாக்டர்கள், வக்கீல்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து முதல்கட்டமாக இந்த 15 பேரையும் ஓரிரு நாளில் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பின் அனைவரும் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Arrest ,businessman ,persons ,doctor , Arrest of 15 persons, including doctor, businessmen ,connection with pornography
× RELATED சீட் பிடிப்பதில் தகராறு...