ஒன்றிய கவுன்சிலர் பதவி 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக எம்எல்ஏ கணவர்

மண்ணச்சநல்லூர்: திருச்சி அருகே வலையூர் ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 14லட்சத்துக்கு அதிமுக எம்எல்ஏ கணவர் ஏலம் எடுத்தார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது வலையூர் ஊராட்சி. இதற்கான ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ பரமேஸ்வரி கணவர் முருகன் போட்டியிட இருப்பதாகவும், வெற்றி பெற்றால் மண்ணச்சநல்லூர் ஒன்றிய சேர்மனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் வலையூர் ஊராட்சியில் நேற்றுமுன்தினம் இரவு உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் வலையூர் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் என்று அனைத்து பதவிகளும் ஏலம் விட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து வலையூர் ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மண்ணச்சநல்லூர் தேர்தல் நடத்தும் துணை அலுவலரிடம் புகார் மனு ஒன்று நேற்று அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி 10 லட்சத்துக்கு ரெங்கராஜ் என்பவருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தத்தமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு கருப்பண்ணன் என்பவர் மூலம் 14 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவி ஆனந்த் என்பவருக்கு 2 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மேலும் வார்டு உறுப்பினர்கள் பதவிகளும் ஏலம் விடப்பட்டுள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. வலையூர் கிராமத்தில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டதாக எழுந்துள்ள புகாரும், ஒன்றிய கவுன்சிலர் பதவியை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ பரமேஸ்வரி கணவர் முருகன் 14லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊராட்சி தலைவர் பதவி 15லட்சத்துக்கு ஏலம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் எடமேலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண் (பொது) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த ஊரில் சில முக்கியஸ்தர்களின் ஏற்பாட்டில் அங்குள்ள ஒரு கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு ஒரு பெண் வேட்பாளர் அதிக பட்சமாக 15 லட்சம் கொடுத்தாகவும், அவருக்கே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனந்த் கவனத்திற்கும் கொண்டு சென்றதை தொடர்ந்து, நீடாமங்கலம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஆறுமுகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு எடமேலையூர் ஊராட்சிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories: