×

புதுச்சேரி கவர்னரின் அதிகாரம் மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை :  புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின்  நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணை நிலை ஆளுநர் செயல்பட முடியாது. யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று  தீர்ப்பளித்தார்.  

இதை எதிர்த்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், மத்திய உள்துறை அமைச்சகமும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தன.   அந்த மனுவில், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து யூனியன் பிரதேச அரசு வழக்கு தொடராத நிலையில், தனிநபரான எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு தொடர உரிமையில்லை. எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தலைமை  நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன் கடந்த 3 நாளாக விசாரணை நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Tags : governor ,Puducherry , Puducherry governor ,postpones ruling on appeal
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...