கடன் தொல்லையால் விபரீத முடிவு? மகன், மகளுடன் ரயில் முன் விழுந்து திருச்சி தம்பதி தற்கொலை : கொடைரோட்டில் பரிதாபம்

வத்தலக்குண்டு: திருச்சியை சேர்ந்த கணவன், மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேர் கொடைரோட்டில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை அடுத்த உறையூர், காவேரி நகரை சேர்ந்தவர் உத்திராபதி (50), தொழிலதிபர். இவரது மனைவி சங்கீதா (43). மகள் அபினயஸ்ரீ (15), மகன் ஆகாஷ் (12). கடந்த 2 நாட்களுக்கு முன்பு  உத்திராபதி மனைவி,  மகன், மகள் ஆகியோருடன், ரயில் மூலம் திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடுக்கு வந்தார். அங்கிருந்து அனைவரும் பஸ்சில் கொடைக்கானல் சென்றனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, நேற்று முன்தினம் இரவு மீண்டும் கொடைரோடு ரயில் நிலையம் வந்தனர்.இரவு 11.30 மணியளவில் உத்திராபதி மகன் ஆகாஷின் கையையும், சங்கீதா மகள் அபினயஸ்ரீயின் கையையும் பிடித்துக் கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். அப்போது சென்னை சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கொடைரோடு ரயில் நிலையத்தை கடந்துள்ளது. இந்த ரயில் கொடைரோட்டில் நிற்காது. கொடைரோடு ரயில் நிலையத்தில் இருந்து 150 மீட்டர் தொலைவில், தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 4 பேர் மீதும்,  கண்ணிமைக்கும் ேநரத்தில் ரயில் பலத்த வேகத்தில் மோதி விட்டு சென்று விட்டது.

இந்த தகவலை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர், கொடைரோடு ரயில் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிக்கு செல்போன் மூலம் தெரிவித்தார். அதன்பேரில் ரயில் நிலையத்தில் இருந்து ஊழியர்கள், ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 4 பேர் உடல் சிதறி பலியாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்களது உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தின் அருகில் கிடந்த அவர்களது பைகளில், 4 பேரின் ஆதார் கார்டுகளும் இருந்தன. இதன்மூலம் அவர்களது பெயர், விபரங்களை போலீசார் தெரிந்து கொண்டனர். இதுதொடர்பாக கொடைரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன்தான் அவர்கள் திருச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு புறப்பட்டுள்ளனர். அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களிடம் விசாரித்தால்தான் தற்கொலைக்கான காரணம் குறித்த முழு விபரங்களும் தெரியவரும்’’ என்றனர்.

Related Stories: