3 நம்பர் லாட்டரியால் விழுப்புரத்தில் விபரீதம் மனைவி, 3 மகள்களை கொன்று நகை தொழிலாளி தற்கொலை : : அதிமுக பிரமுகர் உட்பட 15 பேர் அதிரடி கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரியால் பாதிக்கப்பட்ட நகை  தொழிலாளி தனது மனைவி, 3 மகள்களுக்கு பாலில் சயனைடு கலந்து கொடுத்து  கொலை செய்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே  பனமலை கிராமத்தை சேர்ந்தவர் அருள் (33). இவருக்கும் கடலூர் மாவட்டம்  பண்ருட்டியை சேர்ந்த சிவகாமசுந்தரி (28) என்பவருக்கும் 6  வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு பிரியதர்ஷினி (5), யுவஸ்ரீ (3), பாரதி (1) என 3 பெண்  குழந்தைகள் இருந்தனர். இவர்கள், நகை  தொழிலுக்காக விழுப்புரம் சித்தேரிகரையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து  வந்தனர்.  அருள் ஆரம்பத்தில் சொந்தமாக நகை பட்டறை வைத்து  நடத்தினார். தொழில் நலிவடைந்ததால் வேறு ஒரு பட்டறையில் தொழிலாளியாக வேலை  செய்து வந்தார். போதிய அளவு வேலை கிடைக்காததால் விரக்தியடைந்தார். மேலும்  சொந்தமாக வீடு கட்டுவதற்காக திருச்சி புறவழிச்சாலையில் வீட்டுமனை வாங்கி  வீடுகட்டவும் தொடங்கியுள்ளார். இதற்காக நண்பர்கள் பலரிடம் கடன்  வாங்கியதாக கூறப்படுகிறது.

கடன்தொல்லை அதிகரிப்பு, பணகஷ்டம்  அதிகரித்ததால் 3 நம்பர் லாட்டரி  வாங்க ஆரம்பித்துள்ளார். கடந்த 3, 4 ஆண்டுகளாக சம்பாதிக்கும் பணம்  முழுவதையும் லாட்டரி வாங்கியுள்ளார். இதனால் சரியாக குடும்பம் நடத்த  முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று  முன்தினம் இரவு 11 மணியளவில் அருள், தனது மனைவி, 3 மகள்களுக்கு  விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடிக்கும் வீடியோவை தனது நண்பர்களுக்கு  அனுப்பியுள்ளார். இந்த வீடியோ நகரம் முழுவதும் வாட்ஸ்-அப் குழுக்களில்  பரவியது. இதை பார்த்தவர்கள், விழுப்புரத்ைத சேர்ந்த நகை தொழிலாளி என்பதை  உறுதி செய்து அவரது வீட்டை தேடினர். இறுதியாக 12 மணியளவில் அவரது வீட்டை  கண்டுபிடித்தனர். வீட்டின் முன்பக்க கதவு பூட்டியிருக்கவே, கதவை உடைத்து  உள்ளே சென்றனர். அப்போது, அருள், மனைவி, 3 மகள்கள் மயங்கி கிடந்தனர். இதுகுறித்து  விழுப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்தனர். தொடர்ந்து 5 பேரையும் மீட்டு விழுப்புரம்  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் 5 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை  நடத்தினர். விசாரணையில், நகைபட்டறையில்  பயன்படுத்தப்படும் சயனடை பாலில் அருள் கலந்து முதலில் குழந்தைகளுக்கு  கொடுத்துள்ளார். இதில் 3 குழந்தைகளும் இறந்துள்ளனர்.  அடுத்ததாக சிவகாமசுந்தரிக்கு சயனைடு கொடுத்துள்ளார்.  சில நிமிடங்களில் அவரும் இறந்துவிட்டார். இறுதியில் அருண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதனிடையே இறந்துபோன அருள் உள்ளிட்ட 5 பேரின்  உடல்களும் பிரேத பரிசோதனைக்குப்பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  பின்னர் சித்தேரிக்கரையில் அவர்களது உடல்அடக்கம் செய்யப்பட்டது. 5 பேர் தற்கொலை சம்பவத்தையடுத்து, லாட்டரி ஒழிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதன்படி, விழுப்புரம்  நகரில் 3 நம்பர் லாட்டரி விற்ற இடைத்தரகர்கள் லோகு, ஜேம்ஸ், அகமதுஅலி, மூர்த்தி, முபாரக்அலி, கோவிந்த்,  நாசர்தீனு, பழனியாண்டி, சரவணன், அப்துல்லா, ராஜா, பிரகாஷ், மனோபாண்டியன்  மற்றும் ஒரு அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதுவில் சயனைடு கலந்து குடித்த அருள்
அருள் மற்றும் அவரது குடும்பத்தினர் வேறு ஏதாவது விஷம் அருந்தி இருந்தால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம். இருப்பினும் சயனைடு  அருந்தியதால் சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிட்டது. சயனைடு பெரும்பாலும்  நகை தொழிலாளிகள் கையில் இருக்கும். தங்களை யாரும் காப்பாற்றி  விடக்கூடாது என்பதற்காக அருள் சயனைடு விஷத்தை அருந்த முடிவு செய்துள்ளார். குழந்தைகள், மனைவிக்கு பாலில் கலந்து கொடுத்துவிட்டு, இறுதியாக அவர் மதுவில் சயனைடு கலந்து குடித்துள்ளார்.

பலரின் குடும்பங்களை சீரழித்த 3 நம்பர் லாட்டரி

தமிழகத்தில்  லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் கேரளா போன்ற  வெளிமாநில லாட்டரிகள் ரகசிய 3 எண்ணுடன் படுஜோராக விற்பனை செய்யப்பட்டு  வருகிறது. வாட்ஸ்-அப் மூலமாக தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது.  குறைந்தபட்சம் ₹30-க்கு ஒரு சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு  காவல்துறை ஆசியும் இருப்பதால் வெட்ட வெளிச்சமாக விற்பனையாகிறது. இதனால்  கூலி தொழிலாளர்கள் குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தை 3 நம்பர் லாட்டரியில்  போட்டுவிட்டு தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

வாட்ஸ்-அப்பில் வெளியான பகீர் வீடியோ

விஷம் குடிப்பதற்கு முன்பு 3 வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார்.  ஒரு வீடியோவில், குழந்தைகளுக்கு சயனைடு கொடுக்கும் பகீர் காட்சி பதிவாகி உள்ளது. வீடியோவில் பேசும் அருள்ராஜ், ‘‘குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்துள்ளேன்.  அனைவரும் இந்த காட்சிகளை பாருங்கள்’’ என்றார். ஒவ்வொரு குழந்தையும்  துடிதுடித்து இறக்கும் காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் வகையில்  இருந்தது. மற்ற வீடியோக்களில், ‘‘பாஸ், தெய்வங்களே உங்களிடம்தான் நிறைய  பாடங்கள் கற்றுக் கொண்டேன். மனிதர்களிடம் நியாயம், தர்மம் இல்லை. என்  குழந்தை, மனைவிகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறேன்.

நானும்  சாப்பிட போகிறேன். இதன்பிறகு எதுவும் செய்ய முடியாது. நீங்களே ஜாலியாக  இருங்கள், வாழுங்கள். விழுப்புரத்தில் லாட்டரியை ஒழித்துவிடுங்கள். 3  நம்பரை ஒழித்துவிடுங்கள். என்னை போன்ற 10 பேர் பிழைப்பான். இங்கு யாரும்  யோக்கியன் கிடையாது. நானும் யோக்கியன் கிடையாது. ஏன்டா என்னை இதுபோன்ற  வாழ்க்கையை வாழ வச்சிட்டீங்க. நானும் இன்னும் சிறிதுநேரத்தில் சாகத்தான்  போகிறேன். நகை தொழிலாளர் சங்கம் இனிமேலாவது எதாவது நடவடிக்கை எடுக்க  வேண்டும். பண்ண முடியலனாலும் பரவாயில்லை. குழந்தைகள் செத்துபோயிடுச்சி,  யாருக்கும் தொல்லை கொடுக்கமாட்டோம். இங்கு வாழ முடியவில்லை’’ என்று பதிவாகி உள்ளது.

Tags : jewelery worker ,suicide ,daughters ,Jewelry , Jewelry worker commits suicide , killing wife, 3 daughters
× RELATED கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை