வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை எதிரொலி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: பாஜ.வின் பதில் கோஷத்தால் பரபரப்பு

புதுடெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் நடக்கும் போராட்டம், வன்முறைகள் குறித்து விவகாரத்தை மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று காலை மாநிலங்களவையில் நடந்த  பூஜ்ய நேரத்தின்போது காங்கிரஸ் எம்பி அனந்த் சர்மா, வட கிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறைகள் நடப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தார். அதே நேரம், பாலியல் பலாத்காரம் பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறிய ‘ரேப் இன் இந்தியா’ கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜ பெண் எம்பி.க்கள் முழக்கமிட்டனர். அப்போது, அவை தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘சம்பந்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் மேலவையின் உறுப்பினராக இல்லை. எனவே, உங்கள் எதிர்ப்பை ஏற்க முடியாது,’’ என்று பாஜ பெண் எம்பி.க்களை பார்த்து கூறினார். பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பினாய் விஸ்வத்தை பேசும்படி அழைத்தார்.  

ஆனால், பாஜ எம்பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை சிறிது நேரம் ஒத்திவைத்தார். மீண்டும் அவை தொடங்கியதும் காங்கிரஸ், திரிணாமுல், திமுக உறுப்பினர்கள் எழுந்து, வட கிழக்கு மாநிலங்களில் நடக்கும் வன்முறைகள் பற்றி பிரச்னையை கிளப்பினர். இது பற்றி திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் பேச முயன்றபோது தடுத்த வெங்கையா நாயுடு, அவையின் அலுவலில் பட்டியலிடப்பட்டு உள்ள கேள்விகள் குறித்து பேசும்படி அவருக்கு உத்தரவிட்டார். அதே நேரம், டெரிக் ஓ பிரைனுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பி.க்கள் ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். சிலர் அவையின் மையப் பகுதிக்கு சென்று கூச்சலிட்டனர்.  திரிணாமுல் எம்பி டோலா சென், அவையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த காகிதங்களை கிழித்தெறிந்தார். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததால், அவையை பிற்பகல் ஒரு மணி வரை  வெங்கையா ஒத்திவைத்தார்.

பின்னர், அவை மீண்டும் தொடங்கியதும் பேசிய தலைவர் வெங்கையா நாயுடு, “வரலாற்று சிறப்புமிக்க மாநிலங்களவை 250வது கூட்டத் தொடர் இன்றுடன் முடிகிறது. இந்த தொடர் எனக்கு முழுமையாக மகிழ்ச்சி அளித்தது. ஆனால், சிறு இடையூறுகள் தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும். கடந்த ெதாடரின்போது, கடந்த காலங்களை விட இந்த அவை 104 சதவீதம் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது. இந்த முறையும் 100 சதவீதம் ஆக்கபூர்வமாக செயல்பட்டுள்ளது. இரண்டு முறை 100 சதவீதம் ஆக்கப்பூர்வமாக அவை செயல்பட்டு இருப்பது இதுதான் முதல் முறை.  என்னை பொறுத்தவரை இந்த அவை என்னும் கப்பல் நிலையானது என்பதற்கு இதுவே ஒரு சான்று. இதற்கான பெருமை உங்கள் அனைவரையுமே சேரும்,” என்றார். பின்னர், தேதி குறிப்பிடாமல் அவையை அவர் ஒத்திவைத்தார்.

107 மணி நேரம் நடந்தது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. மாநிலங்களவை 20 அமர்வுகளாக 108 மணி நேரம், 33 நிமிடங்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், 107 மணி நேரம் 11 நிமிடங்கள் அவை நடந்துள்ளது. இதில், 99 சதவீதம் ஆக்கபூர்வமாக செயல்பட்டுள்ளது. மொத்தமாக 11 மணி நேரம் 47 நிமிடங்கள் அமளி, இடையூறுகளால் அவை அலுவல் தடைப்பட்டுள்ளது.

Related Stories: