குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த முடியாது என கூற மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது: மத்திய உள்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: ‘அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையின்படி குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால், அதை அமல்படுத்த முடியாது என கூற மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது,’ என மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான, ‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா’வை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து விட்டதால், அது சட்டமாகி விட்டது. ஆனால், ‘மத அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த குடியுரிமை சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது,’ என கூறி, இதை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

 இது பற்றி மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், ‘‘அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மத்திய அரசு பட்டியலின் கீழ் ராணுவம், வெளியுறவுத் துறை, ரயில்வே, குடியுரிமை உட்பட 97 அதிகாரிகள் வருகின்றன. இந்த பட்டியலின் கீழ்தான் குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், இதை அமல்படுத்த முடியாது என கூற, மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது,’’ என்றார். இது, இச்சட்டத்தை ஏற்க மறுக்கும் மாநில அரசுகளுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக கருதப்படுகிறது.

பாஜ கூட்டணியில் பிளவு?

குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த பல்வேறு மாநிலங்கள் மறுத்து இருப்பதை, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமாரும் வரவேற்றுள்ளார். இது பற்றி ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் நேற்று அளித்த பேட்டியில், ‘குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் அறிவித்து இருப்பதை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாராட்டி உள்ளார். அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நீதித்துறைக்கு அப்பால் இந்தியாவின் ஆன்மாவை காக்கும் பொறுப்பு பாஜ அல்லாத முதல்வர்கள் 16 பேருக்கும் உள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அவர்கள் தங்களின் தெளிவான நிலைபாட்டை தெரிவிக்க வேண்டிய நேரம் இது,’ என குறிப்பிட்டுள்ளார்,’’ என்றார். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளமும் இடம் பெற்றுள்ளது. இதனால், இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக நிதிஷ் குமாரும் கருத்து கூறியிருப்பதின் மூலம், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

திரிணாமுல் எம்.பி. வழக்கு

குடியுரிமை சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகா பொய்த்ரா வழக்கு தொடர்ந்துள்ளார். இதை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மொய்த்ராவின் வக்கீல் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, குடியுரிமை மசோதா விளைவுகள் பற்றி ஐநா சபை கூர்ந்து கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: