×

ஐபிஎல் டி20 ஏலம் இறுதி பட்டியலில் 332 வீரர்கள்: கொல்கத்தாவில் 19ம் தேதி நடக்கிறது

புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடருக்கான ஏலத்தில் இடம் பெறும் 332 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் 13வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 23ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வரும் 19ம் தேதி பிற்பகல் 3.30க்கு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் இடம் பெறுவதற்காக மொத்தம் 971 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். இவர்களில் இருந்து அணிகளின் விருப்பத் தேர்வு அடிப்படையில் 332 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 186 வீரர்களும், வெளி நாடுகளை சேர்ந்த 143 வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். தேசிய அணிக்காக விளையாடிய வீரர்களின் அதிகபட்ச அடிப்படை விலையாக 2 கோடியும், குறைந்தபட்ச அடிப்படை விலையாக ₹50 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய அணிக்காக விளையாடாத வீரர்களின் அதிகபட்ச அடிப்படை விலை 40 லட்சம் மற்றும் குறைந்தபட்ச அடிப்படை விலை ₹20 லட்சம். ₹2 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், கிறிஸ் லின், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தென் ஆப்ரிக்க வேகம் டேல் ஸ்டெயின், இலங்கை ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகிய 7 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை.
இந்திய வீரர்களில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பாவின் அடிப்படை விலை 1.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பியுஷ் சாவ்லா, யூசுப் பதான், ஜெய்தேவ் உனத்காட் ஆகியோரின் அடிப்படை விலை 1 கோடி ஆகும்.

தேசிய அணிக்காக விளையாடியவர்கள்
அடிப்படை விலை    இந்தியா    வெளிநாடு    மொத்தம்
2 கோடி    0    7    7
1.5 கோடி    1    9    10
1 கோடி    3    20    23
75 லட்சம்    0    16    16
50 லட்சம்    9    69    78
தேசிய அணிக்காக விளையாடாதவர்கள்
அடிப்படை விலை    இந்தியா    வெளிநாடு    மொத்தம்
40 லட்சம்    1    6    7
30 லட்சம்    5    3    8
20 லட்சம்    167    16    183




Tags : auction final ,IPL T20 ,Kolkata , IPL T20 Match, Players Auction, Kolkata
× RELATED ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில்...