×

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது : உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நேற்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும்  வழிபாடு செய்யலாம் என கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதற்கு ம் எதிர்ப்பு எழுந்தது . மறுபுறம் பெண்கள் அமைப்புகள் வரவேற்றன. இதையடுத்து சபரிமலை விவகாரத்தில் வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்த இறுதி முடிவை எடுக்க 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதே நேரம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் கிடையாது என குறிப்பிட்டது. இந்நிலையில் புனேவை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாயுடன் வந்த கேரள பெண் பிந்து அம்மணி, கொச்சி போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க வந்தார். அப்போது பக்தர்கள் அவரை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி ஸ்பிரே அடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து பிந்து அம்மணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கேரள போலீசார் சபரிமலை செல்ல எங்களை அனுமதிக்காததோடு, பாதுகாப்பு வழங்கவும் மறுக்கிறார்கள். எனவே கேரள போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். இதுபோல், மாடல் அழகியும், பெண் சமூக ஆர்வலருமான ரஹானா பாத்திமா என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.      இந்த இரண்டு மனுக்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், “சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்பு என்பது இறுதியானது இல்லை. இதில் வழக்கு தற்போது 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு நிலுவையில் தான் உள்ளது. அது விசாரணைக்கு வரும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும். இடைக்கால உத்தரவு எதுவும் தற்போது இந்த அமர்வால் பிறப்பிக்க முடியாது. தற்போது இருக்கும் சூழலில் சபரிமலைக்கு வரும் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பது முடியாத ஒன்றாகும். மனு தாக்கல் செய்துள்ள பெண்களுக்கு மட்டும் ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய பாதுகாப்பு என்பது தொடரும் என உத்தரவிட்டனர்.

* சபரிமலை தொடர்பான முக்கிய வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது.
* இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வரை அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு எதையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது.
* அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கேரள அரசும், போலீசாரும் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* சபரிமலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பது என்பது இயலாத காரியம் என்பதை நீதிமன்றம் உறுதிபட தெரிவித்துள்ளது.

Tags : Women ,Supreme Court Women ,Sabarimala ,Supreme Court , Women who go to Sabarimala, cannot be given protection, Supreme Court
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது