குற்றவாளிகளுக்கு 21 நாளில் தூக்கு பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் : ஆந்திராவில் டிஷா 2019’ நிறைவேறியது

திருமலை: பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம் வழக்குகளை விசாரிக்க 13 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான டிஷா - 2019’’ சட்ட மசோதா ஆந்திராவில் நிறைவேற்றப்பட்டது. ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. இதில், டிஷா 2019’ சட்ட மசோதாவை உள்துறை அமைச்சர் சுச்சரிதா, தாக்கல் செய்தார். அப்போது, முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது: டிஷா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றமும், மனித உரிமைகள் ஆணையமும், பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொலை செய்யப்பட்டது தவறு. போலீசார் என்கவுன்டர் செய்ததும் தவறு என கூறி அரசையும், போலீசையும் கண்டிப்பார்கள்.

இவ்வாறு தொடர்ந்து நடந்தால் தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த ஒரு அரசும், போலீசும், அதற்கு முன்வர மாட்டார்கள். சினிமாவில் பாலியல் பலாத்காரம் செய்தவர்களை என்கவுன்டர் செய்தால் நாம் கைதட்டி வரவேற்போம். அதே நிஜ வாழ்க்கையில் நடந்தால் நீதிமன்றமும், மனித உரிமைகள் ஆணையமும் கண்டிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய நிலை.  நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் சிறையில் ஆனந்தமாக சுற்றி வருகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர். டிஷா வழக்கில் குற்றம் செய்தவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்ற மக்களிவன் விருப்பத்தை தெலங்கானா மாநில நிறைவேற்றியது பாராட்டுக்குரியது. அதேபோல், பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக  பெண் பிள்ளைகளின் தந்தையாகவும், சகோதரிகளின் அண்ணனாகவும் இந்த சட்டத்தை கொண்டு வருகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, உள்துறை அமைச்சர் சுச்சரிதா பேசுகையில், ‘‘டெல்லியில் நிர்பயா, காஷ்மீரில் கத்வா, ஐதராபாத்தில் டிஷா சம்பவங்களை பார்க்கும்போது பெண்கள் அனைவரையும் பயப்பட வைக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சிறப்பு நீதிமன்றத்தில் 21 நாட்களில் தண்டனை கிடைக்க செய்யும் விதமாக சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக 13 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளது,’’ என்றார். பின்னர், இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சந்திரபாபு வரவேற்பு

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு பேசுகையில், ‘‘பெண்கள் பாதுகாப்புக்காக மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவை வரவேற்கிறோம். சட்ட மசோதாவை கொண்டு வருவதோடு நிறுத்தாமல் அதனை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் அந்த சட்டம் கொண்டு வந்ததற்கான பலன் கிடைக்கும். தேவைப்படும் பட்சத்தில் மத்திய அரசு மூலமாகவும் சட்டத்தில் மாற்றம் செய்யும் விதமாகவும் கேட்டுக் கொள்ள வேண்டும்,’’ என்றார்.

Tags : Special Court ,Disha 2019 ,court , Special court ,hear case , hanging rape case
× RELATED பிரபல நடிகை பலாத்கார வழக்கு நடிகை மஞ்சுவாரியர் பரபரப்பு சாட்சியம்