×

உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியீடு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், வருகிற 16ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 23ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் கடந்த செப்டம்பர் 1ம்  தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, வாக்காளர்கள் 1950 என்ற உதவி எண்ணில்  தொடர்பு கொண்டும், என்.எஸ்.வி.பி. என்ற செல்போன் செயலி, தனி இணையதளம், பொது  சேவை மையங்கள், வாக்காளர் சேவை பிரிவுகள் ஆகியவற்றுக்கு சென்று வாக்காளர்  பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.  திருத்தம் இருந்தால், வாக்காளர்களே செய்து கொள்ளலாம் என்று இந்திய தேர்தல்  ஆணையம் அறிவித்தது. வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் கடந்த 30ம் தேதி வரை நடந்தது. இதையடுத்து தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 16ம் தேதி (திங்கள்) வெளியிடப்படும் என்றும், இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்படும் என்றும், புதிய வாக்காளர் பட்டியல் வருகிற பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், தமிழக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்களின் பட்டியல் அடிப்படையிலேயே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதனால், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியை தேர்தல் ஆணையம் வருகிற 23ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 16ம் தேதி வெளியிடுவதாக இருந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் வருகிற 23ம் தேதி வரைவு வாக்காளர் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அந்த தேதியும் தற்போது மாற்றப்பட்டு, அது எந்த தேதியில் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற பிப்ரவரி மாதம் 14ம் தேதி வெளியிடப்படும்.

தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தொடர்பான பணிகள் நடைபெற்று வந்ததால், 30-6-2019 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பட்டியல்தான் உள்ளாட்சி தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி புதிதாக அறிவிக்கப்பட்டு, வருகிற 16ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. வழக்கமாக, வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், 6-12-2019 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களிடம் மனு வாங்கப்பட்டுள்ளது. இவர்களில் தகுதியான பெயர்களை, தேர்தல் ஆணையம் அனுமதியுடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான துணை வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் ஓரிரு நாளில் வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : elections , draft voter list, released on the 23rd , local elections are held
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...