×

அரசு பஸ்களில் சொந்த ஊர் செல்ல பொங்கல் முன்பதிவு தொடக்கம் : சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்கான முன்பதிவு நேற்று துவங்கியுள்ளது. மேலும், சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து விரைவில் ஆலோசனை நடத்த ேபாக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை தொடர் விடுமுறையின் போது, பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக சென்னையில் கூட்டம் அதிகமாக இருக்கும். காரணம் இங்கு வேலை, படிப்பு, தொழில் நிமித்தமாக வெளி ஊர்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்கியுள்ளனர். இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் நிரந்தரமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்ந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதன்படி வரும் ஜனவரி 14ம் தேதி போகிப் பண்டிகை, 15ம் தேதி பொங்கல், 16ம் தேதி திருவள்ளுவர் தினம், 17ம் தேதி உழவர் தினம் வருகிறது. அதற்கு அடுத்த இரு நாட்களும் சனி, ஞாயிற்றுக்கிழமை. எனவே பலரும் 13ம் தேதி இரவோ, அதற்கு முன்பாகவோ சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். மீண்டும் 19ம் தேதி திரும்புவார்கள்.

இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் நடப்பாண்டிலும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுக்கூட்டம் இந்த மாத கடைசியில் நடத்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கூட்டத்தின் ேபாது, எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும், தற்காலிக பேருந்து நிலையங்கள் எங்கு அமைக்க வேண்டும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள், பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகளின் வசதிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அப்போது இறுதியாக எத்தனை சிறப்பு பஸ்கள் இயக்கலாம் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இந்நிலையில் தற்போது இயக்கப்பட்டு வரும் அரசு விரைவுப் பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. எனவே, பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர், இந்த வசதியைப் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

ஆம்னி பஸ் கண்காணிக்க சிறப்பு குழு

நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புவோர் ரயில்களை தேர்வு செய்வார்கள். அங்கு முன்பதிவு துவங்கிய சிறிது நேரத்தில் டிக்கெட் விற்று முடிந்து விடும். பிறகு அரசு பஸ்களையும், ஆம்னி பஸ்களையும் நோக்கி மக்கள் செல்வார்கள். இவர்களை குறி வைத்து, சில ‘ஆம்னி’ பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமலும் சில பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Government ,Pongal ,home , Pongal booking, go home , government buses
× RELATED டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து!!