குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து அசாமில் தொடர்கிறது போராட்டம் மக்கள் ஒட்டுமொத்த உண்ணாவிரதம் : மேற்குவங்கத்தில் ரயில் நிலையத்துக்கு தீ வைப்பு

கவுகாத்தி: குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து அசாமில் நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. மாணவர்கள், மூத்த குடிமக்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் என அதை்து தரப்பினரும் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால், அசாமில் தங்கியுள்ள அகதிகள் பலருக்கு குடியுரிமை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அசாம் ஒப்பந்தத்துக்கு எதிரானது என்பதால், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அசாம் மக்கள் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்து விட்டார். இதனால் ஊரடங்கு உத்தரவையும் மீறி, போராட்டத்தை தொடர முடிவு செய்த அசாம் மக்கள், கவுகாத்தியில் உள்ள சந்த்மாரி விளையாட்டு மைதானத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர்கள், மூத்த குடிமக்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.  

ரயில்கள் ரத்து: வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் 106 பயணிகள் ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. கவுகாத்தி-திமாபூர் எக்ஸ்பிரஸ், சீல்தா-அகர்தாலா கஞ்சன்ஜூங்கா எக்ஸ்பிரஸ், ஹவுரா-திப்ரூகர் கம்ரப் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக வடகிழக்கு ரயில்வே நேற்று அறிவித்தது. டிவி அலுவலகத்தில் போலீஸ் தாக்குதல்: அசாமில் கடந்த புதன்கிழமை மாலை 6.15 மணிக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கவுகாத்தியில் உள்ள ‘பிரக் நியூஸ்’ என்ற தனியார் டிவி சேனல் அலுவலகத்துக்குள் நேற்று முன்தனம் இரவு 8 மணியளவில் போலீசார் புகுந்தனர். வரவேற்பு அறையில் இருந்தவர்கள், அலுவலகத்தில் இருந்தவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியதாக அதன் நிர்வாக ஆசிரியர் பிரனாய் பர்தோலாய் கூறினார். இந்த அத்துமீறிய செயலுக்கு அசாம் போலீஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

முதல்வர் எச்சரிக்கை: அசாமில் பரவிய வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியும், மதவாத சக்திகளும்தான் காரணம் என குற்றம்சாட்டிய அசாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால், ‘‘எந்த வன்முறையையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்,’’ என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லியிலும் பல இடங்களில் போராட்டம் நடந்தது.

ரயில் நிலையம் எரிப்பு

மேற்குவங்கத்தில் வன்முறை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக மேற்கு வங்கத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டம் வங்கதேச எல்லை அருகே உள்ளது. வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பலர் இங்கு உள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் இங்குள்ளவர்கள் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பெல்தங்கா ரயில் நிலையத்துக்கு நுழைந்து பிளாட்பார கடைகளுக்கும் 3 அலுவலகங்களுக்கு தீ வைத்தனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற ரயில்வே பாதுகாப்பு படையினரையும் போராட்டக்காரர்கள் தாக்கினர். இந்த வன்முறையால் மேற்குவங்கத்தில் பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: