ஹெல்மெட் போடாமல் சென்றதாக சேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டும் பெண்ணுக்கு அபராதம் விதித்த சென்னை போலீசார்

* ஆன்லைனில் செலுத்தும்படி அனுப்பிய நோட்டீசால் பரபரப்பு

சேலம்: சேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டும் பெண்ணுக்கு, சென்னையில் ஹெல்மெட் போடாமல் சென்றதாக கூறி அபராதம் விதித்து போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை அடுத்துள்ள பனமரத்துப்பட்டி பழைய தபால்நிலைய தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி கார்த்திகா (36). இவர், உள்ளூரில் பயன்படுத்துவதற்காக ஒரு ஸ்கூட்டர் வைத்துள்ளார். அதில், பனமரத்துப்பட்டியில் உள்ள கடைகளுக்கு சென்று வருகிறார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் கார்த்திகாவிற்கு ஒரு தபால் வந்தது. அது, சென்னை மணலி போக்குவரத்து காவல் அலுவலக முத்திரை பதிவிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில், “கடந்த 3ம் தேதி சென்னை மணலி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 200 அடி சாலையில் தாங்கள் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றுள்ளீர்கள். இந்த போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதத்தொகை ₹100-ஐ 24 மணி நேரத்திற்குள் செலுத்த வேண்டும்’’ எனக்கூறப்பட்டிருந்தது. மேலும், அக்கடிதத்தில் கார்த்திகாவின் ஸ்கூட்டர் எண் குறிப்பிடப்பட்டு, அபராதத்தொகையை, காவல்துறைக்கு ஆன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இக்கடிதத்தை படித்ததும், கார்த்திகா அதிர்ச்சியடைந்தார். அவர் கூறுகையில், “நான் இதுவரை சென்னைக்கு சென்றதில்லை. அதிலும் எனது ஸ்கூட்டரை சேலம் தவிர வேறு எங்கும் ஓட்டியதும் இல்லை. ஆனால், சென்னையில் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து, அபராதம் செலுத்த போக்குவரத்து எஸ்ஐ நோட்டீஸ் அனுப்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது’’’’ என்றார். இதுபற்றி போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, “அவரது வாகன எண் டி.என்.-28 ஏ.எம். 2740 என்று உள்ளது. இந்த வாகனம் சென்னை செல்லவில்லை என்றால், யாரோ இதே எண்ணை போலியாக பயன்படுத்தி திருட்டு வாகனத்தை ஓட்டியிருக்கலாம். அதனால், இதுதொடர்பாக மணலி போக்குவரத்து போலீசார் விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : Chennai ,Salem ,policemen , Chennai policemen fined woman , scooter, wear helmet
× RELATED போலீசார் விசாரித்து வருகின்றனர்....