தேனி அருகே வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு குலுக்கல் முறையில் வேட்பாளர்கள் தேர்வு : வாபஸ் பெற வலியுறுத்தி கிராம மக்கள் எதிர்ப்பு

தேனி: தேனி அருகே குலுக்கல் முறையில் வேட்பாளர்களை தேர்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிச. 27, 30ம் தேதி என இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. மொத்தம் 898 பதவிகளுக்கு 585 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடக்க உள்ளது. தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரெங்காபுரம் கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவி, இம்முறை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பொதுப்பிரிவினருக்கு (ஆண் / பெண்) ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரெங்கபுரம் கிராம கமிட்டியினர், தேர்தல் நடந்தால் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால், போட்டியின்றி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து, நேற்று கிராம கமிட்டித்தலைவர் பரசுராமன், செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கிராமத்தினர் அங்குள்ள மண்டபத்தில் கூடினர். தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு ஒதுக்கிய வார்டை தவிர்த்து, மற்ற 8 வார்டுகளில் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்வது குறித்து ஆலோசித்தனர். பின்னர் போட்டியிட விரும்புபவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம் என முடிவெடுத்தனர்.

இதன்படி 8 வார்டுகளில் போட்டியிட விரும்புவோரின் பெயர்களை எழுதி குலுக்கி போட்டு, சிறுமி மூலம் எடுக்க வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்தனர். இவர்களை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டது. ஆனால், குலுக்கல் முறையை வாபஸ் பெற வேண்டுமென கூறி, கிராம மக்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் கூறுகையில், ‘‘குலுக்கல் முறையில் தேர்வு செய்தது சரியில்லை. மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாதவர்கள் பெயர்கூட வந்துள்ளது. எனவே, குலுக்கல் முறையில் தேர்வு செய்ததை வாபஸ் பெற வேண்டும்’’ என்றார். இதுகுறித்து கிராம கமிட்டித்தலைவர் பரசுராமன் கூறியதாவது, ‘‘பிரச்னையை தவிர்க்க  போட்டியின்றி வார்டு உறுப்பினர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தோம்’’ என்றார்.

விதிகளை மீறிய அதிமுக எம்.எல்.ஏ

திருப்பூர் மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறகிறது. வேட்புமனு தாக்கலின்போது, வேட்பாளருடன் சேர்ந்து 4 பேர் செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஈட்டிவீரம்பாளையம் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் சுமதியும், பெருமாநல்லூர் தலைவர் பதவிக்கு சரஸ்வதியும், கணக்கம்பாளையம் தலைவர் பதவிக்கு சவுந்தர்ராஜனும், பொங்குபாளையம் தலைவர் பதவிக்கு சுலோச்சனா ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இவர்களுக்கு திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ விஜயகுமார் முன்மொழிந்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் அறைக்குள் 3 பேர் மட்டும் அனுமதித்த நிலையில், நான் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ என்னுடன் ஆட்கள் வருபவர்களைஉள்ளே அனுமதிக்க வேண்டுமென போலீசாரிடம் கூறி உள்ளே 6 பேரும் சென்றனர். இதனை பார்த்த மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் காமராஜ், முத்துகண்ணன் ஆகியோர் அங்கிருந்த அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் முன்பே தேர்வு

குலுக்கல் முறையின்போது அனுபவமில்லாதவர் துணைத்தலைவராக வரக்கூடாது என எதிர்ப்பு கிளம்பியதால், கிராமக்கமிட்டி முடிவில் இருந்து பின்வாங்கியது.  உறுப்பினர் தேர்வுக்கான குலுக்கல் முறை வீரபாண்டி போலீசார் முன்னிலையிலே நடந்தது. அவர்கள் இதனை கண்டுகொள்ளவே இல்லை என கூறப்படுகிறது.

Related Stories: