கலைஞர் வழியில் நானும், திமுகவும் மலேசிய தமிழர்களுக்கு என்றும் பக்கபலமாக இருப்போம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘கலைஞர் வழியில் நானும், திமுகவும் மலேசிய நாட்டில் உள்ள தமிழர்களுக்கு என்றும் பக்கபலமாக இருப்போம்’ என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி மாறன் வளாகம் கூட்ட அரங்கில் நேற்று காலை, கவிஞர் வைரமுத்துவுடன், மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சென்னை வந்துள்ள மலேசிய தமிழ் படைப்பாளிகள் 40 பேர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது ஸ்டாலின், அனைவருக்கும் ‘நிறைந்து வாழும் கலைஞர் நினைவு மலர் - 2019’ஐ நினைவுப் பரிசாக வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:

வைரமுத்து, உங்களோடு எந்த அளவுக்கு தொடர்பு வைத்திருக்கிறார் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், கலைஞரிடத்தில் எந்த அளவிற்கு அன்பும், பாசமும் - அதையும் தாண்டி அடிக்கடி கலைஞர், நம்முடையை கவிப்பேரரசு சொல்வது போல் ஒரு காதலே கொண்டிருந்தார் என்பது நாடறிந்த உண்மை. எப்படி கலைஞர் மலேசிய நாட்டில் உள்ள தமிழர்களுக்கு பக்கபலமாக இருந்து வந்திருக்கிறாரோ; அவர் வழியில், நானும் என்றைக்கும் பின்வாங்கிவிடாமல் இருப்பதுடன், தொடர்ந்து உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்த பிரச்னைகளாக இருந்தாலும், அதற்கு முதல் குரல் கொடுக்கும் ஒரு கழகமாக திமுக இருக்கும்.

உங்களைப் போலவே ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் குறைந்தபட்சம் 10,000 பேர் நினைவிடத்திற்கு வந்து தலைவருக்கு வணக்கத்தை செலுத்தி வருகின்றனர். அவரின் நினைவைப் போற்றும் வகையில்தான், அவருடைய ஓர் ஆண்டு நினைவு மலராக வெளியிடப்பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தை உங்களிடத்தில் வழங்கி இருக்கிறோம். உங்கள் அன்பு என்றைக்கும் தொடர்ந்து இருந்திட வேண்டும். நாங்களும் என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருப்போம் என்ற உறுதியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

Related Stories: