10 நோட்டுகள், நாணயங்களை 15 மூட்டைகளில் கட்டி மாநகர பஸ்சில் 27 லட்சம் ரூபாயை சில்லறையாக எடுத்து வந்த வியாபாரி

* வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
* கே.கே.நகரில் பரபரப்பு

சென்னை: சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், மாநகர பேருந்தில் அதிகளவில் பணத்தை ஒருவர் கடத்தி வருவதாக கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். அதன்படி, போலீசார் கே.கே.நகர் பகுதியில் மாநகர பேருந்துகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ஒருவர், 15 மூட்டைகளுடன் பேருந்தில் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த நபரை பிடித்து அவர் கொண்டு வந்த மூட்டைகளை பிரித்து பார்த்ததும் 10 ரூபாய் நாணயங்கள் மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு அந்த நபரை பிடித்து 15 மூட்டைகளுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, திருவள்ளூரை சேர்ந்த ஐயப்பன் (45) என்றும், டாஸ்மாக் கடை, பெரிய மற்றும் சிறு வணிக கடைகளுக்கு சில்லறைகள் கொடுக்கும் பணியை செய்து வந்ததும் தெரியவந்தது. கேரள மாநிலத்தில் இருந்து 10 மூட்டையில் 10 ரூபாய் நாணயங்கள் 5 மூட்டைகளில் 10 ரூபாய் நோட்டுகள் என 15 மூட்டைகளில் 27 லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு வந்துள்ளார். ஐயப்பன் பல ஆண்டுகளாக 1 லட்சம் பணத்திற்கு ஆயிரம் ரூபாய் கமிஷன் என்ற அடிப்படையில் சில்லறை வழங்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார். மேலும், கொண்டு வந்த 27 லட்ச பணத்திற்கான ஆவணங்களையும் அவர் முறையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பாதுகாப்பற்ற முறையில் 15 மூட்டைகளில் பணத்தை கொண்டு வந்ததால் இதற்கு பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து ஐயப்பன் மற்றும் 27 லட்சம் சில்லறைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். அதன்படி அதிகாரிகள் ஐயப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : dealer , Dealer who packed, 10 banknotes,coins , 15 bundles , Rs 27 lakhs, city bus
× RELATED மக்கள் அச்சம் திருவையாத்துக்குடியில்...