குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சாலை மறியல் சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கைது

* தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

Advertising
Advertising

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடந்தது. போலீசார் தடுத்து நிறுத்தி உதயநிதி ஸ்டாலின் உள்பட ஆயிரக்கணக்கானோரை கைது செய்தனர்.

மக்களவை, மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா, மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி, 2014ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து மக்களவை, மாநிலங்களவையில் திமுக தனது கடுமையான எதிர்ப்பு குரலை பதிவு செய்தது. இந்த சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, சிறுபான்மையினர் மற்றும் ஈழ தமிழர்களுக்கும் துரோகம் இழைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் வரும் 17ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்து இருந்தார். இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு திடீரென திமுக இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தன. சென்னை, சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள திமுக தென்சென்னை மாவட்ட அலுவலகம் அருகே இருந்து 1000க்கும் மேற்பட்டோர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கையில் திமுக கொடிகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். கலைஞர் பொன்விழா வளைவு அருகே ஊர்வலம் வந்தபோது, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏராளமான திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திருப்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை உதயநிதி ஸ்டாலின் கிழித்தார். அவருடன் சேர்ந்து திமுக தொண்டர்களும் நகலை கிழித்தனர்.  

இதையடுத்து, உதயநிதி தலைமையில் நிர்வாகிகள் சைதாப்பேட்டையில் உள்ள அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்திருந்த உதயநிதி மற்றும் ஆயிரக்கணக்கான திமுகவினரை போலீசார் கைது செய்தனர். அப்போது, உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், “திமுக இளைஞரணி,  மாணவரணி சார்பாக இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து போராட்டம்  வெற்றிகரமாக நடந்தது. இந்த மசோதாவை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்” என்றார். இதேபோன்று தமிழகம் முழுவதும் நேற்று காலை திமுக இளைஞர் அணியினர் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

Related Stories: