கைதான உதயநிதியுடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு தமிழனுக்கு எதிரான சட்டம் என்பதுகூட எடப்பாடி அரசுக்கு தெரியவில்லை : துரைமுருகன் கிண்டல்

சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசார் உதயநிதி மற்றும் ஆயிரக்கணக்கான திமுகவினரை கைது செய்து நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் அடைத்து வைத்தனர். அவர்களை திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் எம்எல்ஏக்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். பின்னர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: மதத்தை புண்படுத்துகிற வகையிலும், சிறுபான்மையினர்களை பழிதீர்க்கும் வகையிலும் குடியுரிமை திருத்த சட்டம் அமைந்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து குடிபெயர்ந்து அகதிகளாக யார் வந்தாலும் அவர்களை இந்திய நாடு குடிமக்களாக அங்கீகரிக்கும். ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தினர் அப்படி வந்தால் அவர்களையும், இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து அகதிகளாக வந்திருக்கிற தமிழர்களையும் இந்திய குடிமக்களாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அந்த சட்டம் சொல்கிறது. எனவேதான் தமிழ் இனத்துக்கும், சிறுபான்மை சமுதாயத்தினருக்கும் எதிரான சட்டம் இது.

இந்த சட்டம் தீதானது என்பதால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே அந்த வெறுப்பை காட்டுவதற்காக தான் திமுக இளைஞரணி உதயநிதி தலைமையில் அந்த சட்ட நகலை வீதிதோறும் கிழித்தெறிந்துள்ளனர். தமிழர்களுக்காக வாதாடியவர்களை ஏதோ பெரிய குற்றம் செய்தவர்களை போல போலீஸ் பட்டாளத்துடன் சென்று கைது செய்துள்ளனர். திமுகவின் இளைஞர் அணி பட்டாளம் வீறுகொண்டு எழுந்துள்ளது. இதை அடக்கும் சக்தி இந்த அரசுக்கு இல்லை. இங்கிருக்கிற எடப்பாடி அரசுக்கு சட்டமும் தெரியாது. இது தமிழனுக்கு எதிரானது என்பது கூட அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன்.   இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>