தினகரன் நாளிதழ் சார்பில் சென்னையில் மாபெரும் உணவுத் திருவிழா : நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு

சென்னை: இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் தினகரன் நாளிதழின், மாபெரும் உணவுத் திருவிழா நேற்று தொடங்கியது. தினகரன் நாளிதழ் சார்பில் மாபெரும் உணவுத் திருவிழா (சென்னை மெகா புட் பஜார்) நேற்று தொடங்கியது. இந்த உணவுக் கண்காட்சி 15ம் தேதி (நாளை) வரை மூன்று நாட்கள் நடக்கிறது. சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் திருவிழாவில், பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். இதில் இயற்கை உணவு பொருட்கள், ஆர்கானிக் உணவு பொருட்கள், ஊட்டச்சத்து உணவு தயாரிப்புகள், குளிர்பான தயாரிப்புகள், மசாலா தயாரிப்புகள், சுத்தமான, சுகாதாரமான எண்ணெய் போன்றவை இடம்பெறுகிறது. மேலும், இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்த உணவுத் திருவிழா கண்காட்சியை தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மேலும் எவரெஸ்ட் மசாலா சென்னை மண்டல மேலாளர் சுரேஷ்பாபு, மெசின் பேக்டரி நிர்வாக அதிகாரி எஸ்.கே.பாலாஜி, சன் இன்டஸ்ட்ரீஸ் சென்னை பிரிவு நிர்வாக இயக்குநர் ரமேஷ்குமார், பீதாம்பரி புராடெக்ட் உதவி விற்பனை மேலாளர் வேலுமுருகன், தன்யா அசோசியேட் திவ்யா பார்த்தசாரதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உணவுத் திருவிழாவில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம், மசாலா பொருட்கள், தேன், பெருங்காயம், எவரெஸ்ட் மசாலா பொருட்கள் உள்ளிட்ட சமையல்களுக்கு தேவையான பொருட்கள் என 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 10.15 மணி முதல் இரவு வரை கண்காட்சி நடக்கிறது. முதல் நாளான நேற்று  கண்காட்சி அரங்கில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கண்காட்சியில் பங்கேற்ற ஒவ்வொரு நிறுவனமும் தங்களிடம்  வாங்கும் பொருட்களை சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலையில் வழங்கியதால் பலர் போட்டிப் போட்டு வாங்கி சென்றனர். அரங்கிற்கு வந்த பொதுமக்களுக்கு மில்கா ஒன்டர் கேக், பிளன்டி மசாலா டீ தூள் பொடி இலவசமாக வழங்கப்பட்டது.

Related Stories: